• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மதுரை வடமலையான் மருத்துவமனைக்கு சொந்தமான இடங்களில்..,இரண்டாவது நாளாக தொடரும் ரெய்டு..!

Byவிஷா

May 10, 2023

மதுரை வடமலையான் மருத்துவமனைக்கு சொந்தமான இடங்களில் இரண்டாவது நாளாக ரெய்டு நடந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படக்கூடிய வடமலையான் மருத்துவமனை கடந்த சில ஆண்டுகளாக முறையான வருமான வரி செலுத்தவில்லை என புகார் எழுந்துள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் நேற்று காலை முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் மதுரை சொக்கிகுளம் பகுதியில் உள்ள வடமலையான் மருத்துவமனை, தெற்குவாசல் பகுதியில் உள்ள மருத்துவமனை மற்றும் தமிழகம் முழுவதிலும் உள்ள வடமலையான் மருத்துமனைக்கு சொந்தமான மருந்தகங்கள், ஆய்வகங்களின் நிர்வாக அலுவலகங்கள் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் அங்கு நகர் பகுதியில் உள்ள வடமலையான் மருத்துவமனை ஆகிய இடங்களில் சோதனை நடத்தினர்.
நேற்று காலை தொடங்கி விடிய விடிய சோதனை தொடர்ந்த நிலையில் இன்று காலை முதல் 2ஆவது நாளாகவும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக கடந்த சில ஆண்டுகளில் மருத்துவமனைக்கு கிடைக்கப்பெற்ற வருமானங்கள் மற்றும் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை கொள்முதல் செய்துள்ளது தொடர்பான ஆவணங்களை சோதனையிட்டுவருகின்றனர்.
வருமான வரித்துறை சோதனை நிர்வாக அலுவலகங்களில் மட்டுமே நடைபெற்று வரக்கூடிய நிலையில் மருத்துவமனைகளில் நோயாளிகள் வந்து செல்வதற்கு எந்தவித இடையூறும் இன்றி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மதுரையில் பிரபலமான மருத்துவமனையான வடமலையான் மருத்துவமனையில் 2ஆவது நாளாகவும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.