ஒமிக்ரான் தொற்று குறித்து மக்கள் அச்சமடையாமல் அருகில் உள்ள தடுப்பூசி முகாம்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் 13வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மொத்தம் 50,000 தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டை தனியார் கல்லூரியில் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த பின், செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழ்நாட்டில் பூஸ்டர் டோஸ் செலுத்துவது குறித்து ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தார்.
தடுப்பூசி மட்டுமே மக்களை பாதுகாக்கக்கூடியது என்றும் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து விரைவில் அறிவிப்பு வரும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். டெல்டா வைரஸே குறையாத நிலையில், புதிய வகை கொரோனா வந்திருப்பதால் மக்கள் அஜாக்கிரதையாக இருக்கக் கூடாது என அறிவுறுத்திய ராதாகிருஷ்ணன், தமிழ்நாட்டில் 86 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தாமல் இருப்பதாக தெரிவித்தார்.