புதுச்சேரி வில்லியனூர் அருள்மிகு கோகிலாம்பிகை உடனுறை திருக்காமேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 23-ம் தேதி பிடாரி அம்மனுக்கு காப்பு கட்டுதளுடன் தொடங்கியது.
தொடர்ந்து பிடாரியம்மன், ரிஷப வாகனம், மயில் வாகனம், தங்க ரிஷப வாகனம், இந்திர விமானம் ஆகியவற்றில் எழுந்தருளி அம்மன் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்திற்கான கொடியேற்ற நிகழ்வு கடந்த 31-ம் தேதி தொடங்கியது, தொடர்ந்து திருக்காமேஸ்வரர் வெள்ளி ரதத்தில் எழுந்தருளி பாரிவேட்டை நடைபெற்றது.
பிரமோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று திரு தேரோட்டம் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட துணைநிலை ஆளுநர் கைலாசநாதன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனீ. ஜெயக்குமார், சாய் சரவணன் குமார், எதிர்க்கட்சித் தலைவர் சிவா ஆகியோர் தேரினை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

தேரோட்டத்தில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோவிந்தா என்ற கோஷத்துடன் பக்தி பரவசத்துடன் தேரினை வடம்பிடித்து இழுத்தனர். தேரானது நான்கு மாட வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவில் பிரகாரத்தை வந்தடைந்தது. தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.