• Sat. Apr 27th, 2024

தமிழகத்தில் இறுதி வாக்காளர்கள் பட்டியல் வெளியீடு..!

Byவிஷா

Jan 22, 2024

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தீவிர ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருவதன் ஒரு பகுதியாக, இன்று தமிழகத்தில் 1.1.2024ன்படி இறுதி வாக்காளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையர் சத்யபிரதாசாகு வெளியிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் ஆட்சித் தலைவர்கள் வெளியிட்டு வருகிறார்கள்.
திருச்சி மாவட்டத்தில் 9 சட்ட மன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இன்று வெளியிட்டார். அதன்படி திருச்சி மாவட்டத்தில் 11,11,573 ஆண் வாக்காளர்களும், 11,79,985 பெண் வாக்காளர்களும், 332 மாற்று பாலினத்தவர் என மொத்தம் 22,91,890 வாக்காளர்கள் உள்ளனர். 3,04,908 வாக்காளர்களுடன் ஸ்ரீரங்கம் தொகுதி அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாகவும், 2,19,606 எண்ணிக்கையில் குறைந்த வாக்காளர்களை கொண்ட தொகுதியாக லால்குடி தொகுதி உள்ளது.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட 140 திருச்சிராப்பள்ளி (மேற்கு) மற்றும் 141 திருச்சிராப்பள்ளி (கிழக்கு) சட்டமன்ற தொகுதிகளில் 01.01.2024 ஐ தகுதி ஏற்பு நாளாக கொண்டு சிறப்பு திருத்தப் பட்டியல் இறுதி வாக்காளர் பட்டியலை இன்று திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஆணையர் மரு.இரா. வைத்திநாதன் இ.ஆ.ப., அவர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட்டார்கள்.
சோளிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் 6 லட்சம் பேருக்கு மேலும், கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தில் 4 லட்சம் வாக்காளர்களும் உள்ளனர். குறைந்தபட்சமாக 2 லட்சம் வாக்காளர்கள் நாகை மாவட்டம் கீழவேளூர் தொகுதி உள்ளது.
இன்று வெளியிட்ட இறுதி வாக்காளர் பட்டியல் படி, 6 கோடியே 18 லட்சத்து 90 ஆயிரத்து 346 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம்.
தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியலில் புதியதாக 13 லட்சம் பேர் சேர்ந்துள்ளனர். அந்ததந்த மாவட்ட ஆட்சியர்கள் அந்த அந்த மாவட்ட தலை நகரங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *