கோவை மாவட்டம் இருகூர் சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் பகுதியில் ஏராளமான குறுந்தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. விவசாயத்திற்கு தேவையான இயந்திரங்கள் தயாரிப்புகளை ஜாப் ஆர்டர்களாக பெற்று அந்த நிறுவனங்கள் செய்து தருகின்றனர்.

இந்நிலையில் அங்கு குறுந்தொழில் நிறுவனம் நடத்தி வரும் சேகர் என்பவர் தனிப்பட்ட விரோதம் காரணமாக மணிகண்டன் என்பவருக்கு எதிராக பொய் வழக்கு புனைந்து இருகூர் பேரூராட்சிக்கும் தமிழக முதல்வருக்கும் கடந்த ஐந்து மாதங்களாக தொடர்ந்து புகார் அளித்து வந்ததாகவும் அவரது தொடர் அழுத்தத்தின் காரணமாக இருகூர் பேரூராட்சி அதிகாரிகள் சரிவர விசாரிக்காமல் மணிகண்டனின் தொழில் கூடத்திற்கு சீல் வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இருகூர் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.
இது குறித்து பேட்டியளித்த தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் சங்கத்தின் தலைவர் ஜேம்ஸ், கோவை மாவட்டம் குறு சிறு தொழில்கள் நிறைந்த மாவட்டம் என்றும் கோவையின் வளர்ச்சி இந்த நிறுவனங்களை சார்ந்த உள்ளது என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் தனி நபர் ஒருவரின் அழுத்தம் காரணமாக பேரூராட்சி அதிகாரிகள் தொழில் கூடத்தை சீல் வைக்க வந்ததாகவும் பின்னர் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து அதனை தடுத்து நிறுத்தியதாகவும் தற்பொழுது அந்த தொழில் கூடம் இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாகவும் எனவே இது குறித்து மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.




