தடுப்பூசி பணியில் எம்.எல்.எச்.பி. பணியாளர்களை உட்படுத்தும் இயக்குனர் உத்தரவை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், தவறான தகவலை பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்த சுகாதாரத்துறை அமைச்சரை கண்டித்தும் நாகையில் தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில், கிராம சுகாதார செவிலியரின் ஊதியத்திலிருந்து வாடகை பிடித்தம் செய்யும் துணை சுகாதார நிலையத்தில் MLHP நியமனத்தை ரத்து செய்ய வேண்டும், தடுப்பூசி பணியில் MLHP ஐ உட்படுத்தும் இயக்குனர் உத்தரவை திரும்ப பெற வேண்டும், 4000க்கும் மேற்பட்ட கிராம சுகாதார செவிலியர்கள் காலி பணியிடங்களை பயிற்சி பெற்றவர்களை கொண்டு நிரப்ப வேண்டும் உள்ளிட்டு ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் கலைச்செல்வி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட கிராம சுகாதார செவிலியர்கள் கலந்து கொண்டு பத்திரிகையாளர் சந்திப்பில் கொரோனா தடுப்பூசியை எம்.எல்.எச்.பி பணியாளர்களை கொண்டே மேற்கொண்டோம் என தவறான தகவலை பதிவு செய்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை கண்டித்தும் பேசியதை திரும்ப பெற வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
