நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் காக்கழனி ஊராட்சியில் சுமார் 700 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் எந்த வித அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளாத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடைப்பெற்றது.

மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் வி.எம். மகேந்திரன் தலைமையில் 100 க்கும் மேற்பட்டோர் பேரணியாக வந்து ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். தொடர்ந்து அட்டை வைத்துள்ள அனைவருக்கும் 100 நாள் வேலை வழங்க வேண்டும், பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும், தாழ்வாக செல்லும் மின் கம்பங்களை சரி செய்ய வேண்டும், பழுதடைந்த நியாய விலை கடை கட்டிடத்தை சீர் செய்ய வேண்டும். குடிமனை பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து ஊராட்சி செயலர் செல்லதுரையிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதில் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் எம்.கே.நாகராஜன், எஸ்.மேகலா, ஒன்றிய செயலாளர் எம்.காசிநாதன், ஒன்றிய துணை செயலாளர் பி.வினோத், ஒன்றிய நிர்வாகக் குழு உறுப்பினர் பி.சுப்ரமணியன், ஒன்றிய பொதுக்குழு உறுப்பினர் ஏ.மதியழகன், ஒன்றிய விவசாய தொழிலாளர் சங்கம் கே.வெள்ளைச்சாமி, ஒன்றிய விவசாய சங்க செயலாளர் எஸ்.விமலதாஸ், கிளை செயலாளர் எம்.சேகர், உள்ளிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 100 க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.