• Thu. May 2nd, 2024

தரகு வியாபாரிகளால் வலிமை ரிலீசில் ஏற்பட்ட சிக்கல்!

தமிழ் சினிமாவில் கடந்த இருபது ஆண்டுகளில் தொலைக்காட்சி, இணையதளங்கள், சமூக வலைதளங்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து பிரம்மாண்டமாக செய்திகளை வெளியிட்ட படங்களில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சிவாஜி, எந்திரன், விஜய் நடித்து வெளியான மாஸ்டர், அதனை தொடர்ந்து நேற்றையதினம் அஜீத்குமார் நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில், H. வினோத் இயக்கத்தில் வெளியான வலிமை திரைப்படமாகும்.

முந்தைய மூன்று படங்களும் வசூல் அடிப்படையில் சாதனை நிகழ்த்திய படங்களாகும். 2019ல் அறிவிக்கப்பட்ட வலிமை கொரோனா தொற்று, பொது முடக்கம் காரணமாக இரண்டு வருடங்கள் கழித்து வெளியானது. இந்த இடைப்பட்ட காலத்தில் வலிமை படம் பற்றி ஊடகங்களில் வெளியான செய்திகள் அனைத்தையும் பொய்யாக்கியிருக்கிறது. படம் தமிழக திரையரங்க உரிமை சுமார் 75 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த விலை என்பது அஜீத்குமார் படங்களுக்கான வியாபார மதிப்பை காட்டிலும் 25% கூடுதலானது.

வலிமை ஏரியா உரிமை வாங்கியவர்களில் பெரும்பான்மையினர் தொடர்ச்சியாக திரைப்பட விநியோக துறையில் தொழில் செய்பவர்கள் இல்லை. பைனான்சியர்களிடம் கடன் வாங்கி படங்கள் உரிமையை வாங்கும் தரகுமுதலாளிகள் என்பதால் வலிமை படத்திற்கு கூடுதலான விலை கொடுத்து வாங்கியுள்ளனர். இதன் காரணமாக படம் வெளியாவதற்கு முதல் நாள் ஒப்பந்த அடிப்படையில் முழுமையாக பணத்தை சேலம், வட ஆற்காடு, தென்னாற்காடு விநியோக பகுதியின் உரிமை வாங்கியவர்கள் முழுமையாக செலுத்தவில்லை.

இதனால் திரையரங்குகளுக்கு திரைப்படத்தை கொண்டு சேர்க்கும் டிஜிட்டல் நிறுவனங்களுக்கு அனுமதி கடிதம் உரிய நேரத்தில் வழங்கப்படவில்லை. அதன் காரணமாக சேலம் ARRS மல்டிபிளக்ஸ் திரையரங்கில் அதிகாலை ரசிகர் மன்ற காட்சிக்கான டிக்கட் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது. அதிகாலையில் திரையரங்கில் குவிந்த ரசிகர்கள் கேட் திறக்கப்பட்டு, டிக்கட் வாங்கியவர்களை உள்ளே அனுதிக்கவில்லை. டிஜிட்டல் மூலம் படம் தியேட்டருக்கு வருமா வராதா என்கிற அச்சம் காரணமாக கேட்டை திறக்கவில்லை.

ஆத்திரமடைந்த ரசிகர்கள் கேட்டை திறக்க சொல்லியும் திறக்காததால் கேட்டை உடைத்து உள்ளே நுழைய முயற்சித்ததுடன் தியேட்டர் கண்ணாடி ஜன்னல்கள், விலை உயர்ந்த இருக்கைகளையும் சேதப்படுத்தியுள்ளனர். தாமதமாகவே படம் திரையிடப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக திரையரங்க வட்டாரத்தில் விசாரித்தபோது, சேலம் மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் முழுமையாக பணத்தை செலுத்தாமல் நள்ளிரவு வரை பேச்சுவார்த்தை நடத்தி பேசிய தொகையை குறைக்க சொல்லும் விநியோகஸ்தர்கள் அதிகரித்து வருகின்றனர்.

தொடர்ந்து விநியோக துறையில் இருப்பவர்களுக்கு படத்தின் ஏரியா உரிமையை வழங்காமல் விலை அதிகமாக கேட்பவர்களுக்கு படத்தின் உரிமை வழங்கப்படுகிறது. இதனால் கடைசி நேரத்தில் இது போன்ற அசம்பாவிதங்கள் காரணமாக தியேட்டர்கள் சேதப்படுத்தப்பட்டு நஷ்டம் அடையவேண்டியுள்ளது என்கின்றனர். மேலும் அஜீத்குமார் ரசிகர்களிடம் இருக்கும் ஆர்வத்தை பயன்படுத்தி படம் வாங்கிய விநியோகஸ்தர்களே டிக்கட்டை கள்ளமார்க்கெட்டில் அதிக விலை வைத்து விற்பனை செய்து பணம் சம்பாதிக்கின்றனர் என்கின்றனர். பேசிய அடிப்படையில் முழுமையான தொகை செலுத்தப்படாததால் சேலம், வேலூர், கடலூர், பாண்டிச்சேரி பகுதிகளில் ஒரு நாள் முதல்வர் போன்று வலிமை படத்தை திரையிட நேற்று ஒரு நாள் மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. இன்று மீண்டும் ஒரு நாள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்கின்றனர் திரையரங்க வட்டாரத்தில்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *