
தமிழ் சினிமாவில் அதிகப்படங்களை தயாரித்து வரும் நிறுவனம் டிரீம் வாரியர். இந்நிறுவனத்தின் தயாரிப்பில்2019 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி வெளியான படம் கைதி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பட வெளியீட்டுக்கு முன்பாகவே வியாபாரத்தில் சுமார் 7 கோடி ரூபாய் லாபத்தை சம்பாதித்த படம் கைதி.
இப்படம், திரையரங்குகளில் வசூல் சாதனை நிகழ்த்தியது, மட்டுமன்றி பல்வேறு விருதுகளையும் குவித்தது. தென்னிந்திய மொழிகளில் பல சாதனைகளைச் செய்த ‘கைதி’, இந்தியில் ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து டீரீம் வாரியர் தயாரிக்க உள்ளது.
கைதி 2 எப்போது? என்று திரைப்பட ரசிகர்கள் ஆர்வமாகக் கேட்பதும் தொடர்கிறது. இந்த நிலையில், தற்போது ‘கைதி’ புதிய சாதனையை படைக்கவுள்ளது. இப்படம், ரஷ்ய மொழியில் டப்பிங் செய்யப்பட்டு மார்ச் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அங்கு இந்தப்படத்துக்கு வரவேற்பு கிடைக்கும் பட்சத்தில் தமிழ்ப்படங்களுக்கு ரஷ்ய நாட்டில் ஒரு சந்தை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ரஷ்யா போன்றதொரு பெரிய நாட்டில் தமிழ்ப்படங்களை வாங்கித் திரையிடும் வாய்ப்பு உருவாக்கப்பட்டால் அடுத்தடுத்து தமிழ் படங்களுக்கான வியாபார சந்தை உருவாகும் என்கின்றனர் திரையுலகினர்.

