• Sun. Sep 8th, 2024

சீனா குறித்து ஜப்பான் பிரதமருடன் பேசிய பிரதமர் மோடி

இரண்டு நாள் பயணமாக டெல்லி வந்துள்ள ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது சீனா குறித்தும் இரு தலைவர்களும் பேசினர்.
இதுகுறித்து வெளயுறவுச் செயலர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா கூறியதாவது:

இரு தலைவர்களின் பேச்சுவார்த்தையில் சீனா விவகாரமும் முக்கியத்துவம் பெற்றது. லடாக் நிலவரத்தை பிரதமர் மோடி ஜப்பான் பிரதமரிடம் விவரித்தார். லடாக் பகுதியில் சீனா தனது ராணுவ வீரர்களை குவித்து வருவது, அத்துமீறி வருவது குறித்தும் விவரித்தார். மேலும், எல்லைப் பிரச்சனை முடிவுக்கு வரும் வரை வழக்கமான நல்லுறவை சீனாவுடன் தொடர்வதில்லை என்பதும் ஜப்பான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு உறவில் சுமுகத் தீர்வு எட்டப்பட வேண்டுமானால் லடாக் உள்ளிட்ட எல்லைப் பிரச்சனைகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. கிழக்கு மற்றும் தெற்கு சீன கடல் விவகாரத்தில் தங்கள் நாட்டின் நிலைப்பாட்டையும் கருத்தையும் பிரதமர் மோடியிடம் ஜப்பான் பிரதமர் விவரித்தார். இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பில் ஏற்பட்டு வரும் முன்னேற்றத்தை பிரதமர் மோடி பாராட்டினார்.

இரு நாடுகளும் இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பில் பரஸ்பர ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார் என்றார் ஷ்ரிங்கலா. இரு நாடுகளும் வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கிழக்கு மற்றும் தென் சீனக் கடல்சார் பாதுகாப்பு உட்பட ஒத்துழைப்பை எளிதாக்குவது என்ற உறுதியை இரு தலைவர்களும் மீண்டும் உறுதிப்படுத்தினர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த ஆண்டு இறுதியில் சீனாவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா) மாநாட்டில் இருதரப்பு பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க சீனா விரும்புவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, இந்த மாதம் இந்தியா வருகை தரவுள்ளார். இதைத் தொடர்ந்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சீனா செல்லவுள்ளார். எனினும், பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடிக்கு விருந்தளிக்க சீனா விருப்பத்துடன் உள்ளது. அந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதினும் பங்கேற்கவுள்ளார்.
சீனா, ரஷ்யா, இந்தியா ஆகிய 3 நாடுகளின் முத்தரப்பு மாநாடும் தனியாக நடத்த சீனா திட்டமிட்டுள்ளது.
லடாக் விவகாரம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை பிரதமர் சந்திக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

கடந்த 2019ஆம் ஆண்டு மாமல்லபுரத்தில் சீன அதிபரை அழைத்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார் பிரதமர் மோடி. அதைத் தொடர்ந்து, பிரேசிலில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் இரு தலைவர்களும் சந்தித்துக் கொண்டனர். அதன்பிறகு இரு தலைவர்களும் நேரடியாக சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *