• Fri. Apr 26th, 2024

இந்திய பொருளாதாரத்தை உலக அரங்கில் உயர்த்தி காட்டியவர் பிரதமர் மோடி

பிரதமர் மோடி மற்றும் இந்திய பொருளாதாரம் குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடுமையாக விமர்சித்திருப்பதற்கு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவை உலகின் பார்வையில் கீழ் இறக்கிவிட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். ஒன்றிய பாஜக அரசின் அதன் பொருளாதாரம் மற்றும் வெளியுறவு கொள்கைகளையும் மன்மோகன் சிங் கடுமையாக விமர்சித்திருந்தார். பொருளாதார கொள்கைகளில் பாஜகவுக்கு துளியும் புரிதல் இல்லை என்றும் நாட்டில் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகிறார்கள் என்றும் ஏழைகள் மேலும் ஏழைகள் ஆகிறார்கள் என்றும் கூறியிருந்தார்.

அரசியல்வாதிகளை கட்டி அணைப்பதால் மட்டும் உறவுகள் மேம்படாது அல்லது அழைப்பே இல்லாமல் போய் பிரியாணி சாப்பிடுவதால் உறவுகள் மேம்படாது. பாஜகவின் தேசியவாதம், பிரிட்டிஷ்காரர்கள் பயன்படுத்தி பிரித்தாளும் சூழ்ச்சியை அடிப்படையாக கொண்டது. பாஜகவின் பிரித்தாளும் கொள்கையால் அரசியல் அமைப்பு பலவீனமடைந்துவிட்டதாக குறிப்பிட்டிருந்தார். காங்கிரஸ் செய்த நல்ல பணிகளை மக்கள் இன்று நினைவு கூறுகிறார்கள். காங்கிரஸ் கட்சியின் சிறந்த செயல்பாடுகளை மக்கள் நினைவில் வைத்துள்ளனர் என்றும் தெரிவித்திருந்திருந்தார்.

இந்நிலையில் மன்மோகன் சிங்கின் குற்றச்சாட்டுகளுக்‍கு பதில் அளித்துள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தங்கள் மீது மிகுந்த மரியாதை உள்ளதாகவும், தங்களிடம் இருந்து இதனை எதிர்பார்க்கவில்லை என்றும் தங்கள் கருத்து வேதனை தருவதாக கூறியுள்ளார். பிரதமராக இருந்தபோது 22 மாதங்களாக பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் இருந்த மன்மோகன் சிங், முதலீடுகள் இந்தியாவை விட்டு வெளியேறுவதை தடுக்கவில்லை என்று குறிப்பிட்டார். இந்திய பொருளாதாரத்தை உலக அரங்கில் உயர்த்தி காட்டியவர் பிரதமர் மோடி என்றும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *