மின்யான்மர் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவாகியுள்ளது.
மியான்மர் நாட்டில் காலை 11.50 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள இந்திய நில அதிர்வு கண்காணிப்பகம், ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளது. பூமியின் மேற்பரப்புக்குக் கீழே 10 கிலோ மீட்டர் ஆழததில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக கண்காணிப்பகம் உறுதி செய்துள்ளது.
நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அலறியடித்துக்கொண்டு வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டுள்ளது. மியான்மரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பலத்த சேதம் ஏற்பட்டு இருக்கலாம் என்று முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன. மியான்மரின் மத்தியப் பகுதியை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் தாய்லாந்திலும் கடுமையாக உணரப்பட்டுள்ளது. தாய்லாந்திலும் உயரமான பல கட்டிடங்களில் இருந்து மக்கள் அச்சத்தில் வெளியே ஓடி வரும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் இந்த நிலநடுக்கம் கடுமையாக உணரப்பட்டது. உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு ஏற்பட்ட சேதம் அல்லது இழப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை என்றாலும், கட்டிடங்கள் சரிந்துவிழும் பதைபதைக்க வைக்கும் காணொலி காட்சிகள் வைரலாகி வருகின்றன. நிலநடுக்கம் ஏற்பட்டபோது மக்கள் தெருக்களில் ஓடியதால், பல கட்டிடங்கள் இடிந்து விழுந்ததைக் கண்டதாக மாண்டலேயைச் சேர்ந்த மூன்று குடியிருப்பாளர்கள் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தனர்.