• Sat. May 11th, 2024

சென்னையில் 36,000 வீடுகளில் மின்சாரம் நிறுத்தம்

Byகாயத்ரி

Nov 11, 2021

தொடர் கனமழை காரணமாக சென்னையில் 36 ஆயிரம் வீடுகளுக்கு மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.


வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே இன்று மாலை கரையைக் கடக்கிறது. சென்னையில் இருந்து கிழக்கு தென்கிழக்கு திசையில் 170 கிலோமீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து கிழக்கு திசையில் 170 கிலோமீட்டர் தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.


காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் போது சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என தென் மண்டல வானிலை மைய தலைவர் பாலசந்திரன் எச்சரித்துள்ளார்.


இந்நிலையில் கன மழையால் சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின் விநியோகம் நிறுத்தப்பட்டு உள்ளது. பாதுகாப்பு கருதி பெரம்பூர் ,வியாசர்பாடி, மேற்கு மாம்பலம், தியாகராயநகர், கேகே நகர், வேளச்சேரி உள்ளிட்ட சில பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை தாம்பரத்தில் 23 சென்டிமீட்டர் அளவுக்கு அதிகன மழை பெய்துள்ளது. தாம்பரத்தில் அதி கனமழை பெய்துள்ள நிலையில் அங்கு உள்ள சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.


சென்னையில் வியாசர்பாடி, கணேசபுரம், அஜாக்ஸ், கெங்குரெட்டி , மேட்லி, துரைசாமி, பழவந்தாங்கல், தாம்பரம், அரங்கநாதன், வில்லிவாக்கம், காக்கன் ஆகிய 11 சுரங்கபாதைகள் மூடப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *