• Sat. May 11th, 2024

கோவை புதூர் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியில் களை கட்டிய பொங்கல் விழா..!

BySeenu

Jan 14, 2024

கோவை புதூர் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவில், கிராமத்தை நினைவுகூரும் வகையில், மாட்டு வண்டி, உரல்,,அம்மி என மாதிரி கிராமத்தை பள்ளி மாணவ, மாணவிகள் வடிவமைத்து அசத்தியுள்ளனர்.

கோவை புதூர் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியில் கிராமிய பொங்கல் விழா நடைபெற்றது. பாரம்பரிய திருவிழாவாக நடைபெற்ற இதில்,கிராமங்களில் கொண்டாடப்படும் விழாக்களை போல மாட்டு வண்டிகள், கரும்பு தோரணம் கட்டி, வண்ண கோலமிட்டு பொங்கல் வைத்து குலவையிட்டு மகிழ்ந்தனர். தொடர்ந்து மயிலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம் முழங்க மாணவ, மாணவிகள் கரகாட்டம், பரதநாட்டியம், கும்மியாட்டம், ஒயிலாட்டம் கலந்த நடன நிகழ்ச்சிகளை நடத்தினர். தமிழர் பாரம்பரிய வீரத்தை போற்றும் வகையில் சிலம்பாட்டம், மான் கொம்பு, வாள் வீச்சு போன்ற சாகசங்களை மாணவ, மாணவிகள் செய்து காண்பித்தனர்.

குறிப்பாக, பழங்காலத்தை நினைவு படுத்தும் விதமாக, பாக்குவெட்டி, குத்துகால், அஞ்சறைப்பெட்டி, உரல், செப்பு பாத்திரங்கள், படி உழக்குகள், மரக்கால், பழங்கால கேமராக்கள், கிராமபோன், பழங்கால வால்வு ரேடியோக்கள் போன்றவை காட்சிப்படுத்தி இருந்தனர். இந்நிகழ்ச்சியில் ஆஸ்ரம் பள்ளியின் தாளாளர் தேவேந்திரன், நிர்வாகி கவுரி, நிர்வாக இயக்குனர் உதயேந்திரன்,செயலாளர் ரவிக்குமார், வித்யாஸ்ரமம் பள்ளியின் நிர்வாக இயக்குனர் சவுந்தர்யா, ஆஸ்ரம் பள்ளியின் முதல்வர் சரண்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கிராமத்தில் நடக்கும் திருவிழாவை கண்முன் நிறுத்திய இந்த பொங்கல் விழாவில், பெற்றோர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டு நடனமாடியது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *