தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் நாளை (13-ம் தேதி) தீர்ப்பு அறிவிக்கப்பட உள்ளது. இதையொட்டி கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு பொள்ளாச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவி மற்றும் சில பெண்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, ஆபாச வீடியோக்கள் எடுக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. முதலில் பொள்ளாச்சி கிழக்கு போலீசார் விசாரித்த இந்த வழக்கு பின்னர் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு, இறுதியாக சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது.
சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு திருநாவுக்கரசு (25), சபரிராஜன் (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27), மணிவண்ணன் (28), ஹெரன்பால் (29), பாபு (27), அருளானந்தம் (34) மற்றும் அருண்குமார் ஆகிய 9 பேரை கைது செய்தனர். இவர்கள் மீது 2019 மே 21-ந் தேதி கோவை மகளிர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு விசாரணை தாமதமான நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவின்படி கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு அறை ஒதுக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினிதேவி முன்னிலையில் கடந்த 2023 பிப்ரவரி 24-ந் தேதி சாட்சி விசாரணை தொடங்கியது. சாட்சிகள் ஆன்லைன் மூலம் விசாரிக்கப்பட்டனர். குற்றம்சாட்டப்பட்டவர்கள் காணொலி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டனர்.
சாட்சி விசாரணை மற்றும் இருதரப்பு இறுதி வாதங்கள் முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு மே 13-ந் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி நந்தினி தேவி அறிவித்தார். இதற்கிடையே, நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டபோது நந்தினி தேவியும் கரூருக்கு மாற்றப்பட்டார். எனினும், பொள்ளாச்சி வழக்கு முடியும் வரை அவர் கோவையிலேயே பணியாற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், நாளை தீர்ப்பு அறிவிக்கப்பட உள்ளதால் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். தீர்ப்பு காலையிலா அல்லது மதியத்திற்கு பிறகா என்பது நாளை தெரியவரும் என்று வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். இதையொட்டி கோவை நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த தீர்ப்பு தமிழக மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.