திறக்கப்பட்ட விளையாட்டு அரங்கம்!
கடந்த செப்டம்பர் 5 தேதியிட்ட, ‘நமது அரசியல் டுடே’ வார இதழில், “திறக்கப்படாத திட்டங்கள் … கனிமொழி போட்ட உத்தரவு” என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம்.
2013- 14 ஆண்டுகளில் தற்போதைய திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி ராஜ்யசபா எம்பியாக இருந்தபோது தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் இறகு பந்து விளையாட்டரங்கம் மற்றும் உடற்பயிற்சி கூடம் ஆகியவை கட்டுவதற்காக சுமார் 50 லட்சம் ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கினார்.
கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் இந்த அரசு திட்டங்கள் திறப்பு விழா காணாமல் முடி கிடந்தன. இதுகுறித்து மக்கள் கோரிக்கை தொடர்ந்து வைத்து வந்தனர்.
இதையடுத்து இந்த திட்டங்களை உடனடியாக தொடக்கி வைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என தேனி வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அருள்வாசகன், முன்னாள் ஒன்றிய பிரதிநிதி கார்த்திகேயன் தேனி மாவட்ட செயலாளரும் எம்பியுமான தங்க தமிழ்ச்செல்வன் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
தங்க தமிழ்ச்செல்வன் மூலம் இந்த விவகாரம் கனிமொழி எம்பி கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி இதற்கு தடையாக இருப்பதாகவும் திமுக மேல் இடத்துக்கு புகார்கள் சென்றன.
இந்த சூழலில் தான் நமது அரசியல் டுடே இதழில் இந்த செய்தி வெளியானது.
செய்தி வெளியானதும் அதிகாரிகளும் அலர்ட் ஆனார்கள். செய்தி கனிமொழி எம் பி கவனத்திற்கு கொண்டு செல்லப்பட அவர் மீண்டும் இது குறித்து தங்க தமிழ் செல்வவனிடம் அறிவுறுத்தியுள்ளார்.
“நீங்களே திறந்து வச்சிடுங்க” எனவும் கூறியுள்ளார்.
அதன் அடிப்படையில் செப்டம்பர் 22ஆம் தேதி பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த இறகுப்பந்து விளையாட்டு அரங்கம் உடற்பயிற்சி கூடம் ஆகியவற்றை தங்க தமிழ்ச்செல்வன் எம்பி திறந்து வைத்தார்.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய தேனி வடக்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் அருள் வாசகன், “நாங்கள் தொடர்ந்து முயற்சி எடுத்தோம். நமது அரசியல் டுடே செய்தி வெளியானதும் அதுவரை மெத்தனமாக இருந்த அதிகாரிகளும் விழித்துக் கொண்டனர். எங்களுடைய மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் இப்போது இந்த திட்டங்களை மக்களுக்கு அர்ப்பணித்துள்ளார். மக்கள் நலத்திட்டங்கள் மக்களுக்கு சென்று சேர்வதற்கு காரணமாக இருந்த அரசியல் டுடே இதழுக்கு நன்றி” என்றார்
