

தமிழகத்தில் கனமழை பெய்து வருவதால் சென்னையில் மழை விபத்துகளிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க காவலர் பேரிடர் மீட்பு அமைக்கப்பட்டுள்ளது. ஆயுதப்படை காவலர்கள் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில் நீச்சல் மற்றும் வெள்ள நிவாரண பணிகளில் அனுபவம் உள்ள 10 காவலர்கள் உள்ளனர்.
12 காவல் மாவட்டங்களுக்கும் ஒரு சிறப்பு காவலர் பேரிடர் மீட்பு குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டனர்.மேலும் 1 மீட்பு குழுவினர் சென்னை ராஜரத்தினம் ஆயுதப்படை மைதானத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.இந்த மீட்பு குழுவினர் வெள்ளம் அதிகம் சூழ்ந்துள்ள இடங்களுக்கு சென்று பிற அரசு துறை அலுவலர்களுடன் இணைந்து மழை நீர் அகற்றியும், வெள்ளத்தில் சிக்கியுள்ள பொதுமக்களை மீட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் வேளச்சேரி ஏ.ஜி.எஸ் காலனி, சொக்கலிங்கம் நகர் பகுதியில் 3 அடிக்கும் மேல் மழை நீர் வீட்டிற்குள்ளும், வீட்டை சுற்றியும் சூழ்ந்தது. வீட்டின் முதல் தளத்தில் தவித்து கொண்டிருந்த 9 மாத கர்ப்பிணி ஜெயந்தி என்பவரை படகு மூலம் சென்னை காவல்துறை பேரிடர் மீட்பு குழுவினர் மீட்டனர்.அப்பகுதியில் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்த 50க்கும் மேற்பட்டோரை காவல் குழுவினர் படகு மூலம் பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.
