CSR நிதி மூலம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட மாநகர காவல்துறை ரோந்து வாகனங்களை காவல் ஆணையாளர் சரவணசுந்தர் துவக்கி வைத்தார். ஒவ்வொரு ரோந்து வாகனங்களிலும் முன்புறம் மற்றும் பின்புறம் இந்த கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமரா பதிவுகளை நேரலையாக கட்டுப்பாட்டு அறையில் இருந்த படி கண்காணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேட்டி அளித்த கோவை மாநகர காவல் ஆணையாளர் சரவணசுந்தர், கோவை மாநகரில் முதல் கட்டமாக 40 ரோந்து வாகனங்களுக்கு GPS உடன் கூடிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே இந்த ரோந்து வாகனங்கள் எங்கே செல்கிறது என்று கண்காணிக்கலாம் என்றும் இதில் ஆடியோ மற்றும் வீடியோ இரண்டும் பதிவு செய்யும் வசதி இருப்பதாக தெரிவித்தார். மேலும் இது பொதுமக்களுக்கு கூடுதலான பாதுகாப்பை வழங்கும் என்றும் தெரிவித்தார்.

புத்தாண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள், கட்டுப்பாடுகள் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர் அனைத்து வருடங்களிலும் விதிக்கப்படும் கட்டுப்பாடுகளுடன் சேர்த்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் துரிதப்படுத்த அறிவுறுத்தி இருப்பதாகவும், மேம்பாலங்களில் 60 கிமீ வேகத்திற்கு மேல் செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரித்தார். விழா நடத்துபவர்களுக்கும் வழக்கமாக வழங்கப்படும் அறிவுரைகள் வழங்கப்படும் என்றும் கூடுதலாக பாதுகாப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்த வேண்டும் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும், விழாவிற்கு வருபவர்களுக்கு அனுமதி அட்டை ஐடி கார்டு ஆகியவற்றின் மூலம் அனுமதி வழங்க வேண்டும் என்று அறிவுறுத்துவதாக கூறினார்.
பாலங்கள் மீது, நடைபயிற்சி மேற்கொள்வதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு பாலங்கள் மீது பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். ஆம்னி பேருந்துகள் மீது ஏதேனும் விதிமீறல்கள் இருந்தால் வழக்கு பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் கூறினார்.

கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு குறித்தான கேள்விக்கு அந்த வழக்கு மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என்றும் வெகுவிரைவில் ட்ரெயல் ஆரம்பிக்கும் என்றும் தெரிவித்தார்.
அண்மை காலமாக துப்பாக்கி சூடு நடத்தி குற்றவாளிகளை பிடிப்பது தொடர்பான கேள்விக்கு அது அந்தந்த சூழலை பொறுத்து தான் அமையும் என பதில் அளித்தார். மேலும் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் டிஎன்ஏ ரிப்போர்ட் வந்தவுடன் கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் அந்த வழக்கில் சுட்டுபிடிக்கப்பட்டவர்கள் உடல்நிலை நார்மலாக இருப்பதாகவும் கூறினார்.




