• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

மேலிடத்தின் அசரீரி உங்களுக்கு ஆணையிடுகிறதா?- ஞானபீடத்திற்கு கவிஞர் வைரமுத்து கேள்வி

ByP.Kavitha Kumar

Mar 24, 2025

ஞானபீடத்தின் உயர்மட்டக் குழுவில் தமிழுக்குப் பிரதிநிதித்துவம் இருக்கிறதா? தமிழ்ப் படைப்பாளிகள் உங்கள் விதிகளை நிறைவுசெய்யவில்லையா? குழு கூடித்தான் முடிவு செய்கிறதா? அல்லது மேலிடத்தின் அசரீரி உங்களுக்கு ஆணையிடுகிறதா என்று திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”ஞானபீடத்தின் 59-ம் விருது இந்தி எழுத்தாளர் வினோத் குமார் சுக்லாவுக்கு வழங்கப்பட்டிருப்பதற்கு வாழ்த்துகள். 58-ம் விருது சமஸ்கிருத மொழிக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை இந்தி மொழி பெறுவது பன்னிரெண்டாம் முறையாகும். அதில் எங்களுக்கு கசப்போ காழ்ப்போ இல்லை. ஆனால், செம்மொழியான தமிழ், ஈராயிரம் ஆண்டு இலக்கண இலக்கியச் சான்றுகளோடு இயங்கும் தமிழ், அனலையும் புனலையும் மணலையும் தாண்டிவந்த தமிழ், ஒருகாலத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்தப் பரப்பெங்கும் ஒருமொழியாக நின்ற தமிழ் இதுவரை இரண்டே இரண்டுமுறை மட்டுமே ஞானபீட விருது பெற்றிருக்கிறது என்பதை நினைத்தால் இதயத்திற்கு வெளியே ரத்தம் கசிகிறது.

தனக்கு வழங்கப்படவில்லையே என்ற ஆதங்கத்தில் என் அறிக்கை அழுவதாக யாரும் தங்கள் அழகுக் கைக்குட்டையை அழுக்குப்படுத்திக் கொள்ள வேண்டாம். நான் இலக்கிய நீதி கேட்கிறேன். இந்தியப் பட்டியலிலிருந்து தமிழை எடுத்துவிட்டது ஏன்? தென்னகமும் சேர்ந்ததே இந்தியா என்பதை ஞானபீடம் அறியாதா? தமிழ் என்பது மூடப்பட்ட மொழியென்றும், தீவிரவாதிகளின் ஆயுதக் கிடங்கு என்றும் இன்னும் எத்துணை ஆண்டுகள் கருதிக்கொண்டு இருப்பீர்கள்?

ஞானபீடத்தின் உயர்மட்டக் குழுவில் தமிழுக்குப் பிரதிநிதித்துவம் இருக்கிறதா? தமிழ்ப் படைப்பாளிகள் உங்கள் விதிகளை நிறைவுசெய்யவில்லையா? குழு கூடித்தான் முடிவு செய்கிறதா? அல்லது மேலிடத்தின் அசரீரி உங்களுக்கு ஆணையிடுகிறதா? விருது முடிவுசெய்யும் இடத்தில் பீடம் இருக்க, ஞானம் வெளியேறிவிடுகிறதா? இத்துணை கேள்விகளையும் தென்னகம் குறிப்பாகத் தமிழகம் கேட்கிறது. ஒருகாலத்தில் இந்தியக் கலாசாரத்தின் முகமாக விளங்கிய தமிழை, இன்று முகவரி இழக்கச் செய்வது என்ன நியாயம்? வடக்கை மட்டுமே நோக்குமாறு தெற்கை நோக்கித் திரும்பாதவாறு உங்கள் கண்களைப் படைத்தது யார்?

ஞானபீடம் என்பது வடநாட்டுப் படைப்பாளிகளுக்கே உரியது என்ற எழுதப்படாத விதியை நீங்கள் எழுதிவிடவே போகிறீர்களா? இந்தக் கேள்விகளையெல்லாம் அறிவுலகம் கேட்கிறது. இந்தியா பெரிதும் மதிக்கும் ஞானபீடம் இந்தக் கேள்விகளை மடியில் முடிந்துகொள்ள வேண்டும்; பிறகு மனசாட்சியோடு விவாதிக்க வேண்டும். செவ்வாய் கிரகத்தைக் கழித்துவிட்டு சூரியக் குடும்பம் பூரணமாகாது. தமிழைக் கழித்துவிட்டு ஞானபீடம் முழுமையுறாது” என்று அதில் தெரிவித்துள்ளார்.