• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

விஷத்தைச் சாப்பிட்டால்தான் சோறு போடுவீர்களா? – மத்திய அரசுக்கு கவிஞர் வைரமுத்து கேள்வி

ByP.Kavitha Kumar

Feb 18, 2025

மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதிதருவோம் என்பது விஷத்தைச் சாப்பிட்டால்தான் சோறு போடுவோம் என்பது போன்றது என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான், தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி வழங்கப்படும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தி மொழி திணிப்பை தமிழ்நாடு என்றும் ஏற்காது என்று அவர்கள் கூறியுள்ளனர்.

இப்பிரச்சினை தொடர்பாக கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “இந்தி என்ற மொழி தன்னளவில் இயங்குவது அதன் உரிமை. இன்னொரு தேசிய இனத்தின்மீது திணிக்கப்படும்போது அது புல்லுருவிபோல் உள்ளிருந்து தாய்மொழியின் உயிரை உறிஞ்சிவிடும். இந்தியின் ஆதிக்கம் அதிகமான மராத்தி போன்ற மொழிகளுக்கு நேர்ந்த கதி அதுதான். தமிழுக்கும் அது நேர்ந்துவிடக்கூடாது என்றுதான் மும்மொழிக் கொள்கையை மும்முரமாய் எதிர்க்கிறோம்.

மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதிதருவோம் என்பது விஷத்தைச் சாப்பிட்டால்தான் சோறு போடுவோம் என்பது போன்றது, ஏற்றுக்கொள்ள முடியாது; தமிழ்நாட்டு அரசின் நிலைப்பாட்டோடு தமிழர்கள் கெட்டியாக ஒட்டி நிற்கிறார்கள், அறிஞர் அண்ணாவும் உடன் இருக்கிறார்” என்று பதிவிட்டுள்ளார்.