2 நாள் பயணமாக சென்னை வரும் மோடிக்கு சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறும் 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நாளை மறுநாள்(வியாழக்கிழமை) குஜராத்தில் இருந்து தனி விமானத்தில் சென்னை வருகிறார். பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது. பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையான எஸ்.பி.ஜி. குழுவைச் சேர்ந்த 60 பேர் டெல்லியில் இருந்து சென்னை வந்து உள்ளனா். இந்த சிறப்பு படையினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து விமான நிலையம், நேரு உள்விளையாட்டு அரங்கம், கிண்டி அண்ணா பல்கலைக்கழகம், பிரதமரின் ஹெலிகாப்டா் தரை இறங்கும் அடையாறு ஐ.என்.எஸ். தளம் ஆகிய இடங்களில் செய்ய வேண்டிய பாதுகாப்புகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனா்
சென்னையில் இருந்து பிரதமர் புறப்பட்டு செல்லும் வரை சென்னை விமான நிலையத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக அதிகரிக்கப்படுகிறது. அதன்படி சென்னை விமான நிலையம் முழுவதும் 7 அடுக்கு பாதுகாப்பு முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் வருகிற 29-ந் தேதி மாலை வரை அமலில் இருக்கும் என சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.