கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோன்றிமலையில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் வேலம்மாள் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் சி.பி.எஸ்.சி பள்ளிகளுக்கான மாநில அளவிலான தடகள போட்டிகள் கடந்த 19ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 13 ஆயிரத்திற்கும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.

இதில் ஒவ்வொரு மாணவ, மாணவிகளுக்கும் தங்கும் வசதி, உணவிற்காக பணம் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. அதில் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள், திரும்பிச் செல்லும் போது அவர்கள் பயன்படுத்தாத டோக்கன்களை திருப்பிக் கொடுத்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என விதியில் குறிப்பிட்டு இருந்த நிலையில், டோக்கன்களை திரும்ப கொடுத்து பணம் கேட்டால் நிர்வாகம் கொடுக்க மறுப்பதாக விளையாட்டு ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது தொடர்பாக விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்த வேலம்மாள் பள்ளி குழுமம் திருப்பி வழங்க மறுப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து அங்கு வந்த போலீசார் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

விளையாட்டுப் போட்டிகளை ஒருங்கிணைத்த அலுவலரிடம் கேட்ட போது, முதல் நாள் இரவு 8 மணிக்குள் கொடுத்த பள்ளிகளுக்கு திரும்ப கொடுத்து விட்டதாகவும், தாமதமாக வந்த பள்ளி விளையாட்டு ஆசிரியர்களிடம் திரும்ப கொடுக்கவில்லை என தெரிவித்தார். ஆனால், இதனை மறுத்த ஆசிரியர்கள், அவர்களுக்கு வேண்டிய பள்ளிகளுக்கு மட்டும் வழங்கி விட்டு, பெரும்பாலான பள்ளிகளுக்கு பணம் திருப்பி தரவில்லை என குற்றம் சாட்டினர்.