நாகப்பட்டினம் அடுத்துள்ள காடம்பாடி பகுதியில் அமைந்துள்ளது பிரபல சின்மயா வித்யாலயா சிபிஎஸ்சி பள்ளி. இந்தப் பள்ளியில் நாகையை சேர்ந்த ஒரு மாணவர் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் வழக்கம்போல நேற்று மதியம் பள்ளியில் அந்த மாணவர் மதிய உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது அவரை உடற்கல்வி ஆசிரியர் அழைப்பதாக மற்றொரு மாணவர் வந்து கூறியுள்ளார். அதற்கு நான் சாப்பிட்டு வருவதாக அந்த மாணவன் பதில் அளித்து சாப்பிட்டுவிட்டு உடற்கல்வி ஆசிரியர் தினேஷ் குமாரை போய் சந்தித்துள்ளார்.

கூப்பிட்டால் உடனே வர மாட்டாயா என்று கேள்வி எழுப்பிய அப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் தினேஷ்குமார் மாணவரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. கையாளும் பெரும்பாலும் மாணவன் மீது தாக்குதல் நடத்திய ஆசிரியர் தினேஷ் குமார், மாணவனின் தலைமுடியைப் பிடித்து சுவற்றில் மோதி அடித்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆசிரியரின் தாக்குதலால் நிலைகுலைந்து போன மாணவர் மயக்கமடைந்து பள்ளி வளாகத்திலேயே கீழே விழுந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஒன்று கூடவே அவர்களை அப்புறப்படுத்திய ஆசிரியர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் உடற்கல்வி ஆசிரியரால் தாக்கப்பட்ட மாணவரை நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கன்னம் முதுகு தலை உள்ளிட்ட இடங்களில் காயம் அடைந்த மாணவனை பரிசோதித்த நாகை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றொரு ஆம்புலன்ஸ் மூலம் ஒரத்தூர் பகுதியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

உடற்கல்வி ஆசிரியர் தினேஷ்குமார் உடனடியாக அழைத்து நான் வராத காரணத்தால் தன்னை சரமாரியாக தாக்கியதாகவும் என்னை கண்டபடி திட்டி மாணவர்கள் முன்னிலையில் அசிங்கப்படுத்தியதாகவும் காயம் அடைந்த மாணவர் வேதனை தெரிவித்துள்ளார். இதனிடையே தன்னுடைய பிள்ளையை முகம் கை கால் உள்ளிட்ட இடங்களில் கடுமையாக தாக்கிய உடற்கல்வி ஆசிரியர் மீது பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க தயங்குவதாகவும் உடனடியாக பள்ளி நிர்வாகத்தின் மீதும் சம்பந்தப்பட்ட உடற்கல்வி ஆசிரியர் மீதும் நாகை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆடியோ ஒன்றை வெளியிட்டு காயம் அடைந்த மாணவனின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.
நாகையில் உள்ள பிரபல சின்மயா வித்யாலயா பள்ளி மாணவன் உடற்கல்வி ஆசிரியரால் தாக்கப்பட்ட சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர் மற்றும் அவர்களது பெற்றோர்கள் பள்ளியின் உள்ள சக ஆசிரியர்களிடம் வெளிப்பாளையம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.