
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே, விக்ரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கீழப்
பெருமாள்பட்டி கிராமத்தில், விவசாய நிலங்களுக்கு செல்லும் பாதையை ஆக்கிரமித்து வீட்டு மனை கட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், ஊராட்சிக்கு சொந்தமான இடத்தை மீட்கவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
விக்கிரமங்கலம் பால்பண்ணை தெருவில் குடியிருக்கும் மகாராசன், மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது.., நான், விக்கிரமங்கலம் பால்பண்ணை தெருவில் குடியிருந்து வருகிறேன். கீழப்பெருமாள்ப்பட்டி கிராமத்தில் அரசு நத்தம் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தும், பொதுப் பாதையை மறித்தும், கீழ பெருமாள் பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரவி மனைவி காமாயி என்பவர் வீடு கட்டி வருகிறார். இது குறித்து, தங்களின் கவனத்திற்கு கடந்த 10 2 2024 அன்று மனு கொடுத்திருந்தேன்.
அந்த மனு மீது உரிய விசாரணை செய்து 15 நாட்களுக்குள் உசிலம்பட்டி வட்டாட்சியர் பதில் தருவதாக தெரிவிக்கப்பட்டு, ரசீது வழங்கப்பட்டது. ஆனால், இது நாள் வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனக்கு பதிலும் அளிக்கவில்லை. மேற்படி நபர் தொடர்ந்து வீடு கட்டி வருகிறார். ஆகையால், சமூகம் தாங்கள் மேற்படி நட பாதையை மறித்து வீடு கட்டுவதை தடுத்து நிறுத்திட ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், என்னை போன்ற விவசாய நிலங்கள் வைத்துள்ளவர்கள் விவசாய பகுதிகளுக்கு செல்ல வழி இல்லாமல் சிரமப்படுகின்றனர்.
ஆகையால், விவசாயப் பகுதிகளுக்கு செல்ல முறையான பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டுமென, கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
