மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாகவும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இடையூறாகவும் உள்ள பிளக்ஸ் பேனர்களை அகற்ற வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் பிரிவில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

சோழவந்தானை அடுத்து முள்ளிப்பள்ளம் கிராமத்தில் உள்ள ஷேக்ஸ்பியர் என்ற முல்லை சக்தி மனுவை வழங்கி உள்ளார். மனுவில் சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட முக்கிய பகுதிகளான ஜெனகை மாரியம்மன் கோவில் பகுதி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பகுதி தென்கரை வைகை பாலம் பகுதி மருது மகால் பகுதி வட்ட பிள்ளையார் கோவில் பகுதி பேருந்து நிலையம் பகுதி அரசு மருத்துவமனை பகுதி காமராஜர் சிலை பகுதி மூலக்கடை பகுதி உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாகவும் மற்றும் போக்குவரத்திற்கும் இடையூறாகவும் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பேனர்களால் பள்ளி மாணவ மாணவிகளின் கவனம் சிதறி அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவதாகவும் ஆகையால் சோழவந்தான் பேரூராட்சி நிர்வாகம் சோழவந்தான் காவல் நிலைய அதிகாரிகள் ஆகியோர் பொதுமக்கள் போக்குவரத்திற்கு பள்ளி மாணவிகளுக்கு இடையூறாக உள்ள பிளக்ஸ் பேனர்களை அகற்ற வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது மேலும் ஏற்கனவே சோழவந்தான் பேரூராட்சி செயல் அலுவலர் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் ஆகியோரிடத்தில் நேரில் மனு வழங்கிய நிலையில் சில நாட்களுக்கு முன்பு சோழவந்தான் பகுதியில் உள்ள பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்பட்டது.

ஆனால் பேரூராட்சியின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சில தனியார் அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் சார்பில் மீண்டும் மீண்டும் சம்பந்தப்பட்ட இடங்களில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்படுகிறது. இதன் காரணமாக சோழவந்தானில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் சோழவந்தான் காவல் நிலையம் சார்பில் சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளுக்கும் இந்த பிளக்ஸ் பேனர்கள் இடையூறாக உள்ளது. ஆகையால் மாவட்ட ஆட்சித் தலைவர் இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை வழங்க வேண்டும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.




