கரூர், தான்தோன்றிமலை வ உ சி நகரை சேர்ந்தவர் சண்முகப்பிரியன். இவர் பிறந்த 21 நாட்களே ஆன தனது கைக்குழந்தையுடன் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் தனது மனைவியை சேர்த்து வைக்கக் கோரி மனு கொடுத்தார்.
அந்த மனுவில் சண்முக பிரியன் கூறி இருப்பதாவது,

கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் உடற் கல்வி ஆசிரியராக பணி புரிந்த போது, அதே கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த ஈரோடு மாவட்டம், கவுந்தம்பாடியை சேர்ந்த ஹரிணி என்ற மாணவி என்னுடன் பழகி வந்தார். நாளடைவில் ஹரிணியின் அப்பாவும், அம்மாவும் என்னை சந்தித்து பேச தொடங்கினார்கள். ஒரு நாள் ஹரிணியின் அம்மா என்னை சந்தித்து என் மகளை திருமணம் செய்து கொள்ள முடியுமா என கேட்டார். இதற்கு நான் என் வீட்டாருடன் பேசிவிட்டு சொல்கிறேன் என பதில் அளித்து விட்டேன் பிறகு நானும் ஹரிணியும் காதலிக்க ஆரம்பித்தோம். இந்நிலையில் ஹரிணியின் பெற்றோர் எனது சாதியை விசாரிக்க ஆரம்பித்தார்கள். நான் பட்டியல் வகுப்பை சேர்ந்தவன் என தெரிந்த பிறகு அவர்களின் நடவடிக்கையில் மாறுதல் ஏற்பட்டது.

நானும் ஹரிணியும் காதலித்த பொழுது ஏற்பட்ட சந்தர்ப்ப வசத்தால் ஹரிணி இரண்டு மாத கர்ப்பமாக இருந்தார். இதனால் அவரை வீட்டிற்கு தெரியாமல் அழைத்து வந்து கரூரில் திருமணம் செய்து கொண்டோம். பின்னர் தான்தோன்றிமலை காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த பொழுது, இரு வீட்டாருடனும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பெண் வீட்டார் எங்களுக்கு இந்த திருமணத்தில் சம்மதம் இல்லை என கூறி எழுதி கொடுத்து விட்டு சென்று விட்டனர். எனது திருமணத்திற்கு எனது வீட்டில் ஆதரவு தெரிவித்து எங்கள் இருவரையும் அழைத்துச் சென்றனர்.
கடந்த மாதம் அரசு மருத்துவமனையில் எங்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. எங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டு இருந்த நிலையில், எனது மனைவி அவரின் பெற்றோர்களுடன் செல்போனில் பேச ஆரம்பித்தார். அவர்கள் ஹரிணியின் மனதை மாற்றி என்னையும் கைக்குழந்தையும் விட்டு பிரிந்து செல்லும் அளவு செயல்பட்டுள்ளனர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு எங்களை விட்டு எனது மனைவி அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதுகுறித்து பல இடங்களில் பேச்சுவார்த்தை நடத்தியும் எனது மனைவி மனது மாறவில்லை. 21 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையுடன் பரிதவித்து இருக்கிறேன். அதனால் மாவட்ட ஆட்சியரிடம் எனது மனைவி என் குழந்தையுடனும், என்னுடனும் சேர்த்து வைக்கக் கோரி மனுக்கொடுத்துள்ளேன் என தெரிவித்தார்.