மதுரை பெரியார் ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்தின் சுவர் இடிந்து விழுந்துள்ளது. பேருந்து நிலையம் முறையாக பராமரிக்கவில்லை. விழுந்துள்ள சுற்றுச் சுவர் பல நாட்களாக சரி செய்யப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மதுரை பெரியார் பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 159 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு கடந்த 2021 ஆம் ஆண்டு முதல்வர் மு.க. ஸ்டாலினால் திறக்கப்பட்டது.
இந்த ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையம் முறையாக பராமரிக்கப்படாமல் இருப்பதால் பேருந்துகள் வெளியே செல்லக்கூடிய பகுதிகளில் வைக்கப்பட்டிருக்கக்கூடிய ஜெனரேட்டர் மீது சுற்றுச்சுவர் சாய்ந்த படி உள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இந்த சுவர் இடிந்து ஜெனரேட்டர் மீது உள்ளதை அதிகாரிகள் யாரும் அகற்றி சுவரை சீரமைக்கவில்லை.

பேருந்து நிலையத்தில் போதிய இருக்கைகள் இல்லாததால் இந்த கோடைகாலத்தில் நீண்ட நேரம் பயணிகள் கடுமையான வெயிலில் காத்திருக்கும் சூழல் அல்லது தரையில் அமரும் மோசமான நிலை உள்ளது.

பேருந்து நிலையத்தை பராமரிப்பது யார்? எப்பொழுது போதுமான அளவு இருக்கைகள் அமைக்கப்படும் என பயணிகள் கேள்வி எழுப்புகின்றனர். மேலும் பேருந்துகள் எந்த வழித்தரத்தில் எங்கே நிற்கிறது என்று குழப்பத்திலும் பயணிகள் இருக்கின்றன. சராசரியாக இரண்டு பேருந்து நிலையங்கள் இருந்த நிலையில், இப்பொழுது ஒரே பேருந்து நிலையத்தில் அனைத்து நகரப் பேருந்துகளும் இயக்கப்படுவதால் பயணிகள் அனைவருமே குழப்பத்திலேயே அங்கும், இங்கும் அலைய வேண்டிய நிலை உள்ளது. பல ஆண்டுகளாகவே மூடி உள்ள காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்ட் வணிக நோக்கத்திற்காக கட்டப்பட்டது என பொதுமக்கள் குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர்.

எனினும் அது திறக்கப்படவில்லை எனவும், எப்பொழுது திறக்கப்படும் எனவும், அங்கு பேருந்து நிலையமாக இருந்தால் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும் எனவும், எந்த வித பயன்பாடும் இல்லாமல் வெறும் காட்சி பொருளாகவே அங்கு இருப்பதாக குற்றச்சாட்டு முன் வைக்கின்றனர். யாருடைய எதிர்பார்ப்புக்காக அது திறக்கப்படாமல் உள்ளது எனவும், பணிகள் நிறைவு பெற்ற நிலையில், அது பேருந்து நிலையமாக மாற்றாமல் இடப்பற்றாக்குறைகள் பொதுமக்கள் அங்கெங்கும் அலையக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. போதிய நிழல் வசதி செய்து தரப்படுமா? பொதுமக்களுக்கு அடிப்படை குடிநீர், கழிப்பிட வசதிகள் மாநகராட்சி நிர்வாகம் வழங்குமா? என எதிர்பார்ப்புடன் பயணிகள் இருக்கின்றனர்.
