வீடுகளை இடித்துவிட்டு சிலைகள் கட்டப்படுவதாகவும், இப்போது மக்கள் பேசாவிட்டால் விரைவில் நம் நாட்டையே அழித்துவிடுவார்கள் என்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஜஹாங்கிர்புரியில் அனுமன் சேனா ஊர்வலம் சென்ற இந்துத்துவ அமைப்பினர் அவ்வழியே உள்ள மசூதி அருகே தகராறில் ஈடுபட்டதால் இரு தரப்பினர் இடையே மோதல் வெடித்து கலவரமாக மாறியது.
இந்த நிலையில் கலவரத்தில் ஈடுபட்டதாகக் கூறி விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்துத்துவ அமைப்பினர் மீதும் அப்பகுதி இஸ்லாமியர்கள் மீதும் டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்தது.
உத்தரப்பிரதேசத்தில் 5 மாநில தேர்தல்களுக்கு முன்பாகவே அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள், போராட்டங்களில் ஈடுபடுபவர்கள், சிறுபாண்மையினர்கள் என பலரது வீடுகளை புல்டோசர்களை கொண்டு அம்மாநில அரசு இடித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது
இதே போலவே தற்போது ஜஹாங்கிர்புரியில் இஸ்லாமியர்களின் வீடுகள் ஆக்கிரமிப்பு நிலங்களில் கட்டப்பட்டுள்ளதாக கூறி அவற்றை இடிக்க மாநகராட்சி உத்தரவிட்டது. அதன்பேரில் புல்டோசரில் இஸ்லாமியர்களின் வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கட்டிடங்களை இடிக்க இடைக்கால தடை விதித்தது. ஆனால், நீதிமன்ற ஆணை தங்களுக்கு கிடைக்கவில்லை எனக்கூறி அதிகாரிகள் ஏராளமான வீடுகளை இடித்துத் தள்ளினர்.
சிபிஎம் தலைவர்களின் ஒருவரான பிருந்தாகாரத் களத்திற்கே சென்று வீடுகள் இடுக்கபடுவதை தடுத்து நிறுத்தினார்.மேலும் இதற்கு பல்வேறு தரப்பினர் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். பாஜவை தொடர்ந்து விமர்சித்துவருபவர் நடிகர் பிரகாஷ்ராஜ். வீடுகள் இடுக்கப்படும் சம்பவம்குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ், “சிலைகள் கட்டப்படுகின்றன.. வீடுகள் இடிக்கப்படுகின்றன.. மக்கள் பேசாவிட்டால் கூடிய விரைவில் நாட்டையும் அவர்கள் அழித்துவிடுவார்கள்.” எனக் குறிப்பிட்டு உள்ளார்.