• Fri. May 10th, 2024

கழிவுகள் சுத்திகரிப்பு நிலையத்தால் மக்கள் அவதி.., மனு அளிக்க வந்ததால் பரபரப்பு…

BySeenu

Dec 4, 2023

கோவை மாநகராட்சி உக்கடம் புல்லுக்காடு பகுதியில் கழிவுகள் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. அப்பகுதியில் சேகரிக்கப்படும் கழிவுகள் பெரும்பாலும் அங்கு அனுப்பப்பட்டு பிரித்தெடுக்கப்படும். இந்நிலையில் அந்த நிலையத்தில் முறையாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதில்லை எனவும் இதனால் துர்நாற்றம் வீசி பல்வேறு நோய்கள், உடல் உபாதைகள், வருவதாகவும் கூறி அதன் அருகில் வசிக்கும் அன்பு நகர் பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த வந்தனர். மனு அளிப்பதற்கு பெண்கள், குழந்தைகள் உட்பட சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு வந்திருந்தனர்.

வழக்கமாக மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் மனு அளிப்பதற்கு அதிகபட்சம் ஒரு மனுவிற்கு மூன்று அல்லது ஐந்து பேர் மட்டுமே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படும் நிலையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வந்ததால் காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி வழக்கமான நடைமுறைகளை எடுத்துரைத்தனர். இந்நிலையில் அப்பகுதி மக்கள் தாங்கள் அனைவரையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்க வேண்டும் என காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் மூடப்பட்டது. தொடர்ந்தும் அப்பகுதி மக்கள் தங்களை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியதால் பரபரப்பான சூழலில் நிலவியது பின்னர் நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் காவல் துறையினரின் சமரச பேச்சு வார்த்தைக்கு கட்டுப்பட்டு குறிப்பிட்ட நபர்கள் மட்டும் மனு அளிப்பதற்கு சென்றனர்.

இதனிடையே மனு அளிக்க வந்த பெண்கள் அப்பகுதியில் சேகரிக்கபட்ட குப்பைகளை கையில் ஏந்தியபடி கழிவுகள் சுத்திகரிப்பு நிலையம் முறையாக பராமரிக்கப்படாததாலும் குப்பைகள் அகற்றப்படாததாலும் குழந்தைகள் முதியவர்களுக்கு ஏற்படும் நோய்கள் உடல் உபாதைகள் குறித்து எடுத்துரைத்தனர். இச்சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பான சூழல் நிலவியது.

இது குறித்து பேட்டி அளித்த அப்பகுதி மக்கள், குப்பைகளை எடுத்து வரும் வாகனங்களுக்கு கூட அப்பகுதியில் சாலை வசதி இல்லை எனவும் அப்பகுதியில் வசித்து வரும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் கழிவுகள் சுத்திகரிப்பு நிலையத்தால் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர். இது குறித்து பல முறை மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்த போதிலும் தற்பொழுது வரை ஒரு மாநகராட்சி அதிகாரியும் சட்டமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினரும் வந்து அப்பகுதியை பார்வையிடவில்லை என வேதனை தெரிவித்தனர். அப்பகுதியை காலி செய்து போவது தான் தங்களுக்கு அடுத்த வழி எனவும் தெரிவித்தனர். மேலும் அப்பகுதியில் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டு 100 நாட்களுக்கு மேலாகியும் அதற்கான கனெக்ஷன்களை தரவில்லை எனவும் குற்றம் சாட்டினர். மேலும் அப்பகுதியில் இருந்து வரும் கழிவுநீர் மண்ணில் இருந்து 20 பேர் கொண்ட மாஃபியா கும்பல் தங்கம் எடுப்பதாக தெரிவித்த அவர்கள் அப்பகுதியில் குடி தண்ணீர் மாசுபட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும் அப்ப பகுதியில் தெரு நாய்கள் தொலையும் அதிகரித்து வருவதாக தெரிவித்தனர். மாநகராட்சிக்கு அனைத்து வரிகளை கட்டியும் தங்களுக்கு எந்த ஒரு பாதுகாப்புக்கும் மாநகராட்சி நிர்வாகம் தருவதில்லை என தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *