• Sun. May 5th, 2024

போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட்டை இழந்த பவன்கல்யாண்..!

Byவிஷா

Dec 4, 2023

தெலுங்கானாவில் போட்டியிட்ட நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்துள்ளது.
கடந்த மாதம் நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் சத்தீஸ்கர், மத்திய பிரததேசம், ராஜஸ்தான், தெலுங்கானா என 4 மாநில தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. பெரும்பாலும் வெற்றி வாய்ப்புகள், அடுத்த ஆட்சி யாருடையது என்ற விவரங்கள் தெரியவந்து விட்டன.
தெலுங்கானாவில் மொத்தமுள்ள 119 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியானது 64 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்றது. முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் பாரதிய ராஷ்டிரிய சமிதி இந்த முறை 39 தொகுதிகளை மட்டுமே வென்று இருந்தது. பாஜக 8 தொகுதிகளையும், ஏஐஎம்ஐஎம் 7 இடங்களிலும், சிபிஐ 1 இடத்திலும் வெற்றி பெற்றன.
இதில், பாஜகவுடன் தேர்தல் கூட்டணி வைத்திருந்த பவன் கல்யாண் தலைமையிலான ஜனசேனா கட்சி, குகட்பள்ளி, தந்தூர், கோடாட், கம்மம், வைரா எஸ்டி, கொத்தகுடெம், அஸ்வராப்பேட்டை எஸ்டி மற்றும் நாகர்கர்னூல் உள்ளிட்ட 8 தொகுதிகளில் போட்டியிட்டது. தெலுங்கு நடிகரும், அரசியல்வாதியுமான பவன் கல்யாண், திரைப்படத்தில் நடித்துக்கொண்டே ஜனா சேனா கட்சியின் மூலம் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். நடிப்பையும் அரசியலையும் கவனித்து வரும் பவன் கல்யாணின் கட்சி தெலுங்கானா தேர்தலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அனைத்து தொகுதிகளிலும் அக்கட்சி டெபாசிட் இழந்தது. இதனால், ஆந்திரா மாநிலத்தில் ஆளும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராக தொடர்ந்து பேசி வந்த, பவன் கல்யாணுக்கு இது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *