புதுக்கோட்டையில் இருந்து மாலத்தீவுக்கு வேலைக்குச் சென்ற இளைஞரை கடந்த ஆறு ஆண்டுகளாக காணாமல் தவிக்கும் பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த ரமேஷ் சொர்ணவல்லி தம்பதியினரின் மகன் ராஜேஷ். இவர் கேட்டரிங் படிப்பு படித்து முடித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு மாலத்தீவுக்கு வேலைக்கு சென்றவர் தற்போது பெற்றோரிடம் பேச முடியவில்லை.

இதுகுறித்து சொர்ணவள்ளி கூறுகையில் எனது மகன் ராஜேஷ் கேட்டரிங் முடித்துவிட்டு வீட்டில் இருக்க பிடிக்காமல் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு மாலத்தீவுக்கு வேலைக்கு சென்றான். 2019 ஆம் ஆண்டு வேலைக்குச் சென்ற அவன் தொலைபேசியில் ஓர் இரண்டு ஆண்டு காலம் மட்டும் பேசினான். அதாவது நாங்கள் அவனோடு பேச முடிந்தது. அதன் பிறகு சில நேரங்களில் பேசியபோது தொலைபேசியில் பேச முடியவில்லை வேலை மிகவும் சிரமமாக இருக்கிறது என்று கூறினான். அப்படி இருந்தால் வீட்டுக்கு வந்துவிடு என்று சொன்னபோது சரியான பதில் அவனிடம் இருந்து இல்லை.
அதேபோல் அவனிடம் பேச முயற்சித்தால் யாரோ ஒரு பெண் எடுத்து ஹிந்தியில் பேசுகிறார்கள். முதலாளியும் சரியாக பேசுவதில்லை. இதனால் என்ன செய்வது என்றும் எங்களுக்கு புரியவில்லை. அவனுக்கு என்ன சிரமம் என்றும் எங்களுக்கு தெரியவில்லை. உயிரோடு இருக்கிறானா என்பதும் எங்களுக்கு தெரியவில்லை. இதனால் மாவட்ட ஆட்சியரிடம் நாங்கள் பலமுறை மனுக்கள் கொடுத்து விட்டோம். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்கள் மாறி இருக்கிறார்கள் தவிர எனது மகனது நிலை என்ன என்பது எங்களுக்கு தெரியவில்லை. நாங்கள் புகார் மனு கொடுத்த போதெல்லாம் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வரும்போதும் எங்களுக்கு வந்த பதிலில் தங்களது மனுக்களைப் பெற்றுக் கொண்டோம் தங்களது மனுவை பரிசீலிப்பதற்காக அரசுக்கும் அனுப்பி இருக்கிறோம்.

மாலத்தீவு அரசுக்கும் தெரியப்படுத்தியிருக்கிறோம் என்று பதில் வந்தது ஆனால் எனது மகன் என்ன ஆனான் என்று எங்களுக்கு தெரியவில்லை. இப்போது மாவட்ட ஆட்சியருக்கு புகார் கொடுத்திருக்கிறோம் என்ன பதில் வருகிறது என்று எங்களுக்கு தெரியவில்லை பெற்றோர் ஆகிய நாங்கள் மகனை காணாமல் தவிக்கிறோம் எங்களது தவிப்பும் மகனுக்கு தெரியவில்லை மகனது நிலையும் எங்களுக்கு தெரியாததால் வருத்தமாக இருக்கிறது என்று கண்ணீரோடு கூறினார்.




