புதுடெல்லி: காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகளுக்கான தேடுதல் வேட்டை தொடரும் நிலையில், தாக்குதல் நடத்திய மூன்று பேரின் உருவப்படங்களை பாதுகாப்பு ஏஜென்சிகள் வெளியிட்டுள்ளன. தாக்குதலுக்குப் பொறுப்பேற்ற ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் அமைப்பைச் சேர்ந்த ஆசிஃப் ஃபௌஜி, சுலேமான் ஷா, அபு தல்ஹா ஆகியோரின் படங்களே வெளியிடப்பட்டுள்ளதாக ஏஜென்சிகள் தெரிவித்தன.
தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் உள்ளூர் பிரிவுதான் இந்த ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட். செவ்வாய்க்கிழமை மதியம் பைசாரன் புல்வெளியில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் இதுவரை 29 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 26 பேர் சம்பவ இடத்திலும், மூவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
தேடுதல் வேட்டையின்போது, பாரமுல்லாவில் கட்டுப்பாட்டு எல்லை வழியாக ஊடுருவ முயன்ற இரண்டு பயங்கரவாதிகளை ராணுவம் என்கவுன்டரில் கொன்றது. இன்று அதிகாலை இந்த சம்பவம் நிகழ்ந்தது. பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடமிருந்து ஆயுதங்களும் வெடிமருந்துகளும் கைப்பற்றப்பட்டதாக ராணுவத்தின் சினார் கார்ப்ஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
தீவிரவாதிகள் பாரமுல்லாவின் சர்ஜீவன் பகுதியில் இன்று அதிகாலை கட்டுப்பாட்டு எல்லைக்குள் நுழைய முயன்றனர். ராணுவம் ஊடுருவல் முயற்சியை தடுக்க முயன்றபோது, பயங்கரவாதிகள் திருப்பித் தாக்கினர். இதையடுத்து, ராணுவத்தினர் நடத்திய கடுமையான பதிலடி தாக்குதலில் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டதுடன், இரண்டு பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். அப்பகுதியில் ராணுவ நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் காஷ்மீர் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநிலத்தில் பல்வேறு அமைப்புகளின் தலைமையில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த பயங்கரவாத தாக்குதலில் 20 பேர் காயமடைந்தனர்.
