• Fri. Apr 26th, 2024

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Oct 14, 2022

சிந்தனைத்துளிகள்

வித்தியாசமான அணுகுமுறை!!!

மிகவும் பரபரப்பானதொரு காலைப் பொழுதில் கண்ணில்லாத சிறுவன் ஒருவன் நடைபாதையில் நடந்து வந்தான். தான் கொண்டு வந்த பலகையில், "எனக்குக் கண்கள் இல்லை. அதனால் எனக்கு உதவுங்கள்" என்று எழுதி நடைபாதையில் போய் வரும் அனைவரும் பார்க்கும் வகையில் வைத்தான். அவன் மேல் பரிதாபம் கொண்ட சிலர் அவன் முன்னிருந்த விரிப்பில் சில்லறைகள் போட்டனர். அப்போது அவ்வழியே சென்ற மனிதன் தன்னிடமிருந்த பணத்தை விரிப்பிலிட்டான். அச்சிறுவன் வைத்திருந்த பலகையின் மறுபுறம் வேறு சில வார்த்தைகள் எழுதி அனைவரும் பார்க்கும் விதமாக வைத்தான். பிறகு அந்த வழியே சென்றுவிட்டான். 
அதன் பிறகு அவ்வழியே சென்ற அனைவரும் சிறுவனின் விரிப்பில் பணமிட ஆரம்பித்தனர். தான் எழுதிய வார்த்தைகள் எந்த அளவு சிறுவனுக்கு உதவியது என்பதை அறிய மாலையில் மீண்டும் அவ்வழியே வந்தான் அம்மனிதன். பொதுவாக உடல் ஊனமுற்றவர்களுக்கு மற்ற புலன்களனைத்தும் மிகவும் சக்தி வாய்ந்ததாகயிருக்கும். அம்மனிதனின் காலடிகள் மூலம் அவன் வருகையை அறிந்து கொண்டான் சிறுவன்.
"காலையில் நீங்கள் எதையோ பலகையில் எழுதிய பிறகுதான் அனைவரும் எனக்கு உதவினார்கள். அனைவரும் உதவும் வகையில் அப்படி அதில் என்ன எழுதினீர்கள்?" என்று கேட்டான். அதற்கு அவன், "நீ எழுதியதையேதான் நானும் எழுதினேன். ஆனால் கொஞ்சம் மாற்றி எழுதியிருக்கிறேன். பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை" என்றான். அம்மனிதன் எழுதியது,

“இன்றைய தினம் மிகவும் அருமையாக விடிந்துள்ளது.
ஆனபோதும் என்னால் அதை ரசிக்க முடியவில்லை”
சிறுவனும், மனிதனும் சொல்லும் விஷயம் என்னவோ ஒன்றுதான். சிறுவனுக்கு பார்வையில்லை என்பதையேதான் இருவரும் சொல்கிறார்கள். ஆனால் அதைச் சொல்லும் விதத்தில் வேறுபடுகிறார்கள். சிறுவன் முதலில் மற்றவர்களை உதவிடுமாறு எழுதியிருந்தான். ஆனால், அம்மனிதன் எழுதியதோ, மற்றவர்களால் பார்த்து ரசிக்க முடிந்த ஒன்றைப் பார்வையில்லாத காரணத்தால் சிறுவனால் ரசிக்க முடியவில்லை என்பதாக இருந்தது.
நீங்கள் சொல்ல வருவது அனைவராலும் ஒப்புக்கொள்ளக் கூடியதாக இருக்கலாம். ஆனால் சொல்லும் விதத்தில் சொல்வதால் மட்டுமே உரிய பலனை அடைவீர்கள்.
இதன் மூலம் நாம் அறிய வரும் முத்தான மூன்று கருத்துக்கள் :
 மற்றவர்களிடம் இல்லாத பல அரிய விஷயங்களை நமக்களித்த கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்.
 உங்களால் இயன்ற வரையில் மற்றவர்களுக்கு உதவிடுங்கள்.
 எதையும் வித்தியாசமான கண்ணோட்டத்தில் அணுகிடுங்கள். ஆக்கப்பூர்வமாக சிந்தித்திடுங்கள். பிரச்சனைக்குத் தீர்வு காண வழிகள் பல உண்டு என்று காண்பீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *