பி.டி.செல்வகுமார் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில். முதல்வர்
மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க வில் இணைந்தபின் சொந்த ஊரான நாகர்கோவில் வந்த போது. நாகர்கோவில் சந்திப்பு இரயில் நிலையத்தில் திமுகவின் பல்வேறு பிரிவுகளை சேர்ந்தவர்கள் வாழ்த்தி வரவேற்றார்கள்.
இரயில் நிலையத்தில் செய்தியாளர்கள்
சந்திப்பில் தெரிவித்தவைகள்.

அமித்ஷாவின் குறுக்கு வழி அரசியல் தமிழகத்தில் எடுபடாது

அமித்ஷாவின் குறுக்கு வழி அரசியல் தமிழகத்தில் எடுபடாது என பி.டி.செல்வகுமார் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான ரெ.மகேஷ் முன்னிலையிலும் திமுகவில் இணைந்தார். இந்நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், திமுகவின் முன்னணி தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சென்னை அண்ணா அறிவாலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இவ்விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மிகுந்த மரியாதையுடனும், உற்சாகத்துடனும் பி.டி.செல்வகுமாரை வரவேற்றனர்.
இந்நிலையில், இணைப்பு விழாவுக்குப் பின்னர் நாகர்கோவில் ரயில் நிலையம் வந்த அவருக்கு திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கலப்பை மக்கள் இயக்கத்தின் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, நாகர்கோவில் திமுக தலைமை அலுவலகத்தில் கலைஞரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். தொடர்ந்து வடசேரி அண்ணா சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது., கே: திமுகவில் என்ன அடிப்படையில் இணைந்தீர்கள்?
பதில்: நான் சினிமா உலகிலும், பத்திரிகை உலகிலும் 30 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்தவன். சினிமா தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளேன். நடிகர் விஜய்க்கு மேலாளராக இருந்து அவரது வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியுள்ளேன். உண்மையான உழைப்பு மூலம் இந்த அளவுக்கு வளர்ந்தவன். பணத்துக்காக நான் எங்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இது என்னுடன் பயணம் செய்யும் அனைவருக்கும் தெரியும். மேலும், கலப்பை மக்கள் இயக்கம் மூலம் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தில் பல்வேறு பள்ளி கட்டிடங்கள், கலையரங்குகள், விளையாட்டு மைதானங்களை உருவாக்கியுள்ளேன்.
இந்நிலையில் நான் உடல் நலம் இல்லாமல் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தபோது, என்னை நேசித்தவர்கள் மட்டுமின்றி என்னை எதிரியாக நினைத்தவர்கள் கூட நேரில் வந்து நலம் விசாரித்தனர். ஆனால், நான் 30 ஆண்டுகள் யாருக்காக உழைத்தேனோ (நடிகர் விஜய்) அவர் என்னை நலம் விசாரிக்கவில்லை. இனியும் அவரிடம் இருந்தால் எடுபடாது என உணர்ந்ததாலும், எனது மக்கள் பணியை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்ற எண்ணத்திலும் திமுகவில் இணைந்தேன்.
கே: கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியில் நீங்கள் ஏற்கனவே போட்டியிட்டவர் என்பதால், இந்த தொகுதியை குறிவைத்துதான்
திமுகவில் இணைந்ததாக பரவலாக பேசப்படுகிறதே?
பதில்: நான் ஒரு சாமானிய மனிதன். குறிவைத்து இணைந்துள்ளேன் என்பது ஏற்புடையதல்ல. கடந்த சில ஆண்டுகளாக கடுமையான மக்கள் பணியை தொடர்ந்து செய்து வருகிறேன். இனிமேலும் அப்படித்தான் எனது மக்கள் பணி இருக்கும். திமுக 75 ஆண்டுகள் பாரம்பரியம் வாய்ந்த கட்சி. இதனை தமிழக முதல்வரும், திமுக தலைவருமான தளபதியார் அவர்கள் மிகுந்த கட்டுக்கோப்புடன் வழிநடத்திச் செல்கிறார், இந்த இயக்கத்தில் கடினமான களப்பணியை ஆற்றுவேன். தலைமை என்ன சொல்கிறதோ அதற்கு கட்டுப்பட்டு நடப்பேன்.

கே: பீகார் போல தமிழகத்தையும் பிடிப்போம் என மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளது குறித்து தங்கள் கருத்து என்ன?
பதில்: பாஜக எப்போதுமே ஒரு மிரட்டல் அரசியலில் ஈடுபட்டு வருகிறது. இதன் மூலம் தமிழகத்தையும் கைப்பற்றி விடலாம் என எண்ணுகிறார்கள். நாட்டு மக்களை எப்போதும் பதட்டத்திலேயை வைத்திருக்க வேண்டும் என திட்டமிட்டு செயல்படுகின்றனர். குறிப்பாக மத அரசியலைப் பயன்படுத்தி மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். தமிழக மக்கள் எப்போதுமே சிந்தித்து செயல்படுகின்றவர்கள். மக்கள் தெளிவாக உள்ளதால் அவர்களால் தமிழகத்தில் எக்காலத்திலும் காலூன்ற முடியாது. அமித்ஷாவின் குறுக்கு வழி அரசியல் தமிழகத்தில் எடுபடாது.
இந்தியாவைப் பொருத்தவரை ஜனநாயக நாடு. ஆங்கிலேயர்கள் நாடல்ல என்பதை பாஜகவினர் உணர வேண்டும். ஒரே நாடு, ஒரே வரி என்கின்றனர். ஆனால், மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி தர மறுக்கின்றனர். பாஜக ஆட்சி அமைந்தால் இத்திட்டம் வரும் என வானதி ஸ்ரீனிவாசன் பேசுகிறார்.
மேலும், புதிய கல்விக்கொள்கையை தமிழகத்தில் ஏற்றுக் கொண்டால் மட்டுமே 2000 கோடி கல்வி நிதியை விடுவிக்க முடியும் என்பதெல்லாம் மிரட்டல் இன்றி வேறென்ன?
தமிழக முதல்வரின் சீரிய திட்டங்கள் முன்பு அமித்ஷாவின் திட்டங்கள் தவிடு பொடியாகும். மக்கள் சக்தியுடன் 224 தொகுதிகளில் திமுகழகம் வெற்றி பெற்று மீண்டும் தமிழக முதல்வராக தளபதி மு.க.ஸ்டாலின் அரியணையில் அமர்வது உறுதி இவ்வாறு அவர் தெரிவித்தார்.




