• Fri. Apr 26th, 2024

ஓயாத திமுக-நாதக மோதல்..திமுகவுக்கு அன்புமணி எச்சரிக்கை

தமிழகம் வன்முறைக் களமாக மாறிவிடும் என நாம் தமிழர் கூட்ட விவகாரத்தில் திமுகவுக்கு எம்பி அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். தருமபுரி மாவட்டம் மொரப்பூரில் நாம் தமிழர் கட்சியினர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பொதுக் கூட்டம் நடத்தினர். இந்த கூட்டத்தில் திமுகவை நாம் தமிழர் நிர்வாகிகள் விமர்சித்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த திமுகவினர் நாம் தமிழர் கட்சியினரை தாக்கினர். இது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் நாம் தமிழருக்கு ஆதரவாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை விடுத்திருந்தார். எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவிற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நன்றி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் பாமக இளைஞரணி தலைவரும் மாநிலங்களவை எம்பியுமான அன்புமணி ராமதாஸும் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் தருமபுரி மாவட்டம் மொரப்பூரில் நாம் தமிழர் கட்சி நடத்திய பொதுக்கூட்டத்தில் திமுகவினர் தாக்குதல் நடத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது.

சகிப்புத் தன்மையும், கருத்துரிமையை மதிப்பதும் தான் ஜனநாயக அரசியலின் அடிப்படை. அதை மீறியவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்! விமர்சனங்களுக்கு வன்முறைகளால் பதிலடி தரத் தொடங்கினால் தமிழகம் அரசியல் களமாக இருக்காது.. வன்முறைக்களமாக மாறிவிடும். அந்த நிலை ஏற்பட்டு விடக் கூடாது. அதைக் கருத்தில் கொண்டு இனி இத்தகைய நிகழ்வுகள் நடக்காமல் அனைவரும் தடுக்க வேண்டும்! இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

அண்மைக்காலமாக ட்விட்டரிலும் நாம் தமிழர் கட்சிக்கும் திமுகவுக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது. இது போல் இரு கட்சிகளும் அடித்துக் கொள்வதால் தமிழகத்தில் வன்முறை தலை தூக்கும் என அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கருத்து தெரிவிக்கிறார்கள். இந்த பிரச்சினை எப்போது முடிவுக்கு வரும் என தெரியவில்லை. அது போல் அடுத்தடுத்து நடைபெறும் நாம் தமிழர் கூட்டங்களில் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை கவனிக்க திமுக தொண்டர்கள் செல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *