• Fri. Apr 26th, 2024

திகார் சிறையில் நிரம்பி வழியும் கைதிகள் – டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல்

திகார் சிறை வளாகங்களில் 5,200 கைதிகளை அடைக்கக்கூடிய திறன் உள்ளது, ஆனால் தற்போது 13,183 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
டெல்லியில் அமைந்துள்ள திகார் சிறைச்சாலை உலகின் மிகப்பெரிய சிறை வளாகங்களில் ஒன்றாகும். திகாரில் 5,200 கைதிகளை அடைக்கக்கூடிய திறன் உள்ளது, ஆனால் தற்போது திகாரில் உள்ள சிறை வளாகங்களில் 13,183 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திகார் சிறையில் நிரம்பி வழியும் கைதிகள் கூட்ட நெரிசலுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செயப்பட்டுள்ளது. அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, திஹார் சிறை வளாகத்தில் உள்ள நபர்கள் 3 ஆண்டுகளுக்கு குறைவான தண்டனை விதிக்கக்கூடிய மற்றும் முதல் முறையாக குற்றவாளிகளாக இருந்தால், அவர்களை ஜாமீனில் விடுவிக்க தகுதிகாண் அறிக்கையை பரிசீலிக்க வேண்டும். 2004ல் ரோகினியில் கட்டப்பட்ட சிறை வளாகம் மற்றும் 2016ல் மண்டோலியில் கட்டப்பட்ட சிறை வளாகம், திகார் சிறைச்சாலையில் நிரம்பி வழியும் கைதிகள் கூட்டத்தை குறைக்கும் என்று கருதப்பட்டது. ஆனால் அங்கும் இந்த அவல நிலையே தொடருகிறது. தேவையற்ற கைதுகளால் சிறை வளாகத்தில் நெரிசல் ஏற்படுகிறது. இந்த சிறை வளாகத்தின் நெரிசல் காரணமாக, கைதிகளுக்கு ஏற்படும் மன மற்றும் உடல் ரீதியான சித்திரவதைகளின் விளைவாக அவர்களின் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது. இத்தகைய சிறைகளில் கூட்டம் அதிகமாக இருப்பதால், ‘அரசியலமைப்பின் 21வது பிரிவின் கீழ் அளிக்கப்பட்டுள்ள கைதிகளின் அடிப்படை உரிமைகள்’ மறுக்கப்படுகிறது என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *