• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

இன்று தி.நகரில் நடைமேம்பாலம் திறப்பு..!

Byவிஷா

May 16, 2023

இன்று தி.நகரில் நடைமேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
சென்னை நகரின் மிகப்பெரிய வர்த்தக பகுதியான தியாகராய நகரில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.28 கோடியே 45 லட்சம் செலவில் ஆகாய நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. இந்த பாலம் தியாகராய நகர் வரும் ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக மாம்பலம் ரயில் நிலையத்தில் இருந்து தியாகராய நகர் மேட்லி சாலை சந்திப்பு வரை ஆகாய மார்க்கமாக நடந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டு வந்தது.
கொரோனா காலகட்டத்தில் இப்பணிகள் தாமதம் ஆகி பின்னர், மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த ஓராண்டாக விறுவிறுப்புடன் நடைபெற்று வந்தது. சுமார் 570 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்ட இந்த பாலத்தில் தற்போது அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ளது. இன்று, இந்த மேம்பாலத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
பாலத்தில் மாற்றுத் திறனாளிகள் சிரமமின்றி செல்லும் வகையில் சக்கர நாற்காலி வசதியும் செய்யப்பட்டு உள்ளது. தியாகராய நகர் பேருந்து நிலையத்தை ஒட்டிய பகுதியில் நகரும் படிக்கட்டு அமைக்கப்பட்டுள்ளது. மாம்பலம் ரயில் நிலையம் மற்றும் உஸ்மான் சாலையில் தலா ஒரு மின் தூக்கிகளும் அமைக்கப்பட்டுள்ளது. மின் விளக்குகளும், கண்காணிப்பு கேமரா வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மாம்பலம் போலீஸ் நிலையத்தில் இருந்து இந்த கண்காணிப்பு கேமராக்களை கண்காணிக்க முடியும். இந்த ஆகாய நடை மேம்பாலத்தால் தியாகராய நகரில் இனி கூட்ட நெரிசல் தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.