• Wed. Jan 22nd, 2025

ஊட்டியில் “பத்து ரூபாய்க்கு ஜெயிலுக்கு போகலாம்”

நீலகிரி மாவட்டம் ஊட்டியை அடுத்துள்ள நடுவட்டம் பகுதியில், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட சிறைச்சாலை புதுப்பிக்கப்பட்டு சுற்றுலாப்பயணிகள் பார்வைக்காக செயல்பட்டு வருகிறது.

இந்தியா ஆங்கிலேயர் ஆட்சியின் கட்டுப்பாட்டில் இருந்தபாேது சுதந்திரப் பாேராட்ட வீரர்கள் மற்றும் தலைவர்கள் உள்ளிட்டாேரை ஒடுக்குவதற்காக, அவர்களைக் கைது செய்து பல்வேறு இடங்களில் சிறையில் அடைத்து சித்தரவதை செய்தனர். இதற்காக இந்தியாவில் பல்வேறு இடங்களில், சிறைச்சாலைகள் அமைக்கப்பட்டன.


இதுபோன்ற சிறைச்சாலைகளை நீலகிரி மாவட்டத்திலும் அமைத்தனர். அப்படி 1850-களில் ஊட்டி – கூடலூர் சாலையில் நடுவட்டம் பகுதியில் கைதிகள், சுதந்திரப் போராட்ட வீரர்களை அடைப்பதற்காக சிறைச்சாலையை உருவாக்கினா். இதில் கைதிகளை அடைக்கும் வகையில் 11 அறைகள், ஒரு தூக்கு மேடை உள்ளிட்டவை அமைக்கப்பட்டன.


மருத்துவ வசதிகள் முன்னேறாத அக்காலகட்டத்தில், நீலகிரி மாவட்டத்தில் மலேரியா நோய் வேகமாகப் பரவியது. இதனால் ஏராளமானோர் உயிரிழக்கவும் செய்தனர். சின்கோனா தாவரத்திலிருந்து தயாரிக்கப்படும் மருந்து, மலேரியா நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது என்பதை அறிந்த ஆங்கிலேயர்கள், சின்கோனா என்ற தாவரத்தை உற்பத்தி செய்ய முடிவு செய்தனர்.

இதற்காக தென் அமெரிக்காவின் பெரு நகரத்தில் இருந்து முடிவு செய்தனர். இதற்காக தென் அமெரிக்காவின் பெரு நகரத்தில் இருந்து சின்கோனா தாவரத்தை வரவழைத்தனர். தொடர்ந்து 1864-ல் ஆங்கிலேயர் – சீனப் போரில், பிரிட்டிஷ் ராணுவத்திடம் சரணடைந்த கைதிகளை நடுவட்டம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.

அந்தக் கைதிகளைக் கொண்டு நடுவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் மலேரியாவை குணப்படுத்தும் தன்மை கொண்ட சின்கோனா செடிகள் பயிரிடப்பட்டன.

1947-ல் இந்தியா சுதந்திரத்துக்குப் பிறகு நடுவட்டம் பகுதியில் ஆங்கிலேயர் ஆட்சியில் அமைக்கப்பட்ட சிறைச்சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள தேயிலை தோட்டங்கள், தாயகம் திரும்பிய தமிழ் மக்களுக்காக அமைக்கப்பட்ட தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகத்தின் (டேன்டீ) கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. 150 ஆண்டுகளுக்கும் மேல் பழைமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க இந்த சிறைச்சாலை பராமரிப்பு இல்லாமல் இருந்தது.

பாரம்பரிய கட்டிடமாக விளங்கி வரும் இதை சுற்றுலாப் பயணிகள் பார்த்துச் செல்லும் வகையில் 2009-10 -ம் ஆண்டு மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதுப்பிக்க நிதி ஒதுக்கப்பட்டது. தமிழ்நாடு தேயிலைத் தோட்ட கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தச் சிறைச்சாலை புதுப்பிக்கப்பட்டு, பெரியவர்களுக்கு ரூ.10, சிறுவர்களுக்கு ரூ.5 என நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனாலும், போதிய விளம்பரம் இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் வருகை சொற்பமாகதான் உள்ளது.