தேனி விஸ்வதாஸ் நகரை சேர்ந்தவர்கள் முத்தையா (48), முத்துராணி தம்பதிகள்.
இவர்களது மூத்த மகன் முத்துமாணிக்கம்,இளைய மகன் முத்துப்பாண்டி.
மூத்த மகன் முத்துமாணிக்கம் மாற்று சாதி பெண்ணை காதலித்ததால் ஏற்பட்ட பிரச்சனையில்,ஊரை காலி செய்து உத்தமபாளையம் அருகே உள்ள வாய்க்கால்பட்டியில் வசித்து வந்தனர்.

முத்தையாவின் அப்பா உடல்நிலை சரியில்லாத நிலையில் தேனி விஸ்வதாஸ் நகரில் குடியிருந்து வந்தார்.
கடந்த மூன்று மாதங்களாக அனுமந்தன்பட்டியைச் சேர்ந்த நவீன் (25) முத்தையாவின் அப்பாவை உடன் தங்கியிருந்து பராமரித்து வந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு முத்தையாவின் அப்பா உயிரிழந்த நிலையில், அவருக்கு 16 வது நாள் காரியம் செய்வதற்காக நேற்று முத்தையா அவரது மனைவி முத்துராணி உள்ளிட்ட குடும்பத்தினர் தேனிக்கு வந்தனர்.
நள்ளிரவில் முத்தையாவின் இளைய மகன் முத்துப்பாண்டிக்கும்,நவீனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது நவீன் முத்துப்பாண்டியை சரமாரியாக தாக்கி கத்தியால் குத்த முயன்றுள்ளார். இதை தடுக்க முயன்ற முத்து ராணிக்கு கையில் கத்திக்குத்து காயம் ஏற்பட்டது.

மேலும் அவர்களது உறவினரான மீனாட்சி என்பவருக்கும் கத்திக் குத்து காயம் ஏற்பட்டுள்ளது. முத்தையா இதனை கண்டித்த நிலையில், நவீன் முத்தையாவை கத்தியால் சரமாரியாக குத்தினார்.
பின்னர் அப்பகுதியில் இருந்தவர்கள் கூடியதை தொடர்ந்து, நவீன் அப்பகுதியில் இருந்து தப்பி ஓடினார்.
இது குறித்து உறவினர்கள் அளித்த தகவலின் பெயரில் தேனி நகர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த முத்தையா மற்றும் காயமடைந்த மூன்று பேரையும் மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முத்தையா வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும் காயமடைந்த முத்துப்பாண்டி,முத்துராணி,மீனாட்சி ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக தப்பி ஓடிய நவீன் மீது வழக்கு பதிவு செய்த தேனி நகர் காவல் துறையினர் அவரை தீவிரமாக தேடி வந்த நிலையில், கைது செய்யப்பட்டார்.
துக்க வீட்டிற்கு வந்த உறவினர்களுக்குள் ஏற்பட்ட தகராறில்,25 வயது இளைஞர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்ததுடன் மூன்று பேரை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அப்பா இறந்த 16-வது நாளில் மகனும் கொலை செய்யப்பட்ட சம்பவம் தேனி பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.