• Fri. Apr 26th, 2024

காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை: அரசாணை வெளியீடு

Byமதி

Nov 4, 2021

காவலர்கள் முதல் தலைமைக் காவலர்கள் வரை வாரத்தில் ஒரு நாள் விடுப்பு குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.

24 மணி நேரமும் பணி செய்து வரும் காவலர்களுக்கு ஒரு நாள் விடுப்பு வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை. ஒவ்வொரு முறையும் இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படுவதோடு அடுத்தக்கட்ட நகர்வு எதுவுமில்லாமல் இருந்தது.

இந்நிலையில் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு சட்டசபையில் காவலர்களுக்கு ஒரு நாள் விடுப்பு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி, காவலர்கள் தங்கள் உடல் நலனைப் பேணிக் காத்திட ஏதுவாகவும், தங்களது குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடுவதற்காகவும், இரண்டாம் நிலைக் காவலர்கள் முதல், தலைமைக் காவலர் வரையிலான காவலர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கிட முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று உத்தரவிட்டார்.

அதன்படி வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், “தமிழக காவல்துறையில் காவலர்கள் எவ்வித ஓய்வும் இன்றி தொடர்ந்து பணிபுரிவதால் மனதளவில் சோர்வடைகிறார்கள். இதனால் அவர்கள் உடல் நலனும் பாதிப்படைந்து அவர்கள் பணித்திறன் பாதிக்கும் ஆபத்து உள்ளது. 1977ம் ஆண்டு தொடங்கப்பட்ட தேசிய போலீஸ் கமிஷன் மற்றும் அதன்பிறகு வந்த போலீஸ் கமிஷனிலும் காவலர்களுக்கு வார விடுமுறை அளிப்பது தொடர்பாக பரிசீலனை செய்வது குறித்து உறுதியாக தெரிவித்துள்ளனர்.

மேலும் தமிழ்நாடு காவல் நிலை ஆணை 243 (1)ன் படியும் வார விடுமுறை வழங்குவது குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் வாரத்தில் ஒரு நாளாவது காவலர்களுக்கு வார விடுமுறை வழங்க தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு டிஜிபி எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். டிஜிபியின் கடிதம் தொடர்பாக தமிழக அரசு தீவிர ஆலோசனை நடத்தியது. அதன்படி தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலைக் காவலர்கள் முதல், தலைமைக் காவலர் வரையிலான காவலர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஐந்து நாள் வேலை நாட்களில் ஒரு நாள் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம்.

அப்படி அவர்கள் தவிர்க்க முடியாத காரணத்தால் பணிபுரிய நேர்ந்தால் அதற்குறிய ஒரு நாளைக்குறிய ஊதியம் தனியாக வழங்கப்படும். வார விடுமுறை அந்தந்த காவல் நிலைய பணிச் சூழலைப் பொறுத்து எடுத்துக் கொள்ளலாம். அந்த வாரம் விடுப்பு எடுக்கும் காவலரின் பெயர் விவரங்கள் காவல் நிலைய நோட்டீஸ் போர்ட்டில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். இது மாற்றுக் காவலரை பணியில் அமர்த்துவதற்கு ஏதுவாக இருக்கும். இதற்கான உத்தரவை டிஜிபி உடனடியாக அமல்படுத்த வேண்டும்” என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் நிலை காவலர்கள் முதல் தலைமைக் காவலர்கள் வரை வார ஓய்வு குறித்து தமிழ்நாடு முதல்வரின் இன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் சாராம்சம் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று முதல், இரண்டாம் நிலை காவலர்கள் முதல் தலைமைக் காவலர்கள் வரையில் ஐந்து நாட்கள் பணியும், ஆறாவது நாளில் பணி மேற்கொண்டால் அதற்கு உண்டான மிகைப் பணி ஊதியமும், வாரத்தில் ஒரு நாள் ஓய்வும் வழங்கப்படும்.

காவலர்களின் நீண்ட நாள் கோரிக்கையான இந்த வார ஓய்வு குறித்து சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த உத்தரவை பிறப்பித்துள்ள முதலமைச்சருக்கு தமிழக காவல்துறை தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது. காவலர்களுக்கு இது தீபாவளி பரிசாக அமைந்தது” என்று தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்ட செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *