• Sat. May 4th, 2024

காவேரி கூக்குரல் சார்பில் தொண்டாமுத்தூரில் மரப் பயிர் சாகுபடி பயிற்சி.., விவசாயிகள் பங்கேற்பு…

ByKalamegam Viswanathan

Jan 7, 2024

ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் ‘லட்சங்களை கொட்டி தரும் மரப் பயிர் சாகுபடி’ என்ற களப் பயிற்சி கோவை தொண்டாமுத்தூரில் இன்று (ஜன 7) மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று பயன்பெற்றனர்.

பயிற்சி நடைபெற்ற சீதா வனம் இயற்கை விவசாய பண்ணையின் உரிமையாளர் டாக்டர் திரு. டி.எம். மாணிக்கராஜ் மற்றும் முன்னோடி மரப் பயிர் விவசாயி திரு. வள்ளுவன் அவர்கள் பல அடுக்கு பல பயிர் சாகுபடி முறையின் நன்மைகள் குறித்தும், விவசாய விளைப் பொருட்களை நேரடியாக சந்தைப்படுத்துவதும் குறித்தும் தங்கள் அனுபவங்களை ஆலோசனைகளாக வழங்கினர்.

வள்ளுவன் அவர்கள் பேசுகையில், “மரம் சார்ந்த விவசாயத்திற்கு மாறிய பிறகு என்னுடைய தென்னை மரங்களில் காய்ப்பு அதிகரித்துள்ளது. காயின் எடையும் கூடியுள்ளது. மேலும், மண்ணின் வளமும் அதிகரித்துள்ளது. இதனால், சூழலியல் மற்றும் பொருளாதார ரீதியாக பல பலன்கள் எனக்கு கிடைத்துள்ளது” என்றார்.

இந்நிகழ்ச்சியில் மண்ணுக்கேற்ற மரங்களை தேர்வு செய்து அதை நடும் வழிமுறைகள் குறித்தும் விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது. அத்துடன், பயிற்சியில் பங்கேற்ற விவசாயிகள் பண்ணை முழுவதையும் நேரில் பார்வையிட்டு தங்களுடைய பல்வேறு சந்தேகங்களை முன்னோடி விவசாயிகளிடம் கேட்டு தெளிவு பெற்றனர்.

இது தொடர்பாக காவேரி கூக்குரல் இயக்கத்தின் தமிழக கள ஒருங்கிணைப்பாளர் திரு. தமிழ்மாறன் அவர்கள் கூறுகையில், “விவசாயிகளின் பொருளாதாரத்தை அதிகரிப்பதற்கும், சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கும் மரம்சார்ந்த விவசாயம் ஒரு சிறந்த தீர்வாக உள்ளது. எனவே, காவேரி கூக்குரல் இயக்கமானது தமிழக விவசாயிகளிடம் மரம்சார்ந்த விவசாய முறையை ஊக்குவிக்கும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது. இதற்கு விவசாயிகள் மத்தியிலும் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது.

இதன்காரணமாக, இன்று ஒரே நாளில் கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இதுபோன்ற மண்டலவாரியான களப் பயிற்சிகளை நடத்தி உள்ளோம். அந்தந்த பகுதி விவசாயிகள் அவர்களுடைய பகுதியில் உள்ள மண் மற்றும் தட்பவெப்ப சூழலுக்கு ஏற்ப எந்த மாதிரியான மரங்கள் வளரும் என்பதை நேரில் பார்த்து தெரிந்து கொள்ள இப்பயிற்சி பெரிதும் உதவியாக இருக்கும்” என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *