• Thu. Jan 22nd, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பூங்கா நிலத்தை, நீதிமன்ற உத்தரவின்படி மீட்ட அதிகாரிகள்..,

BySeenu

Jan 21, 2026

கோவை, சரவணம்பட்டி பகுதியில் தி.மு.க ஆதரவாளர் ஒருவரால் பல ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான பூங்கா நிலத்தை, நீதிமன்ற உத்தரவின்படி மாநகராட்சி அதிகாரிகள் இன்று அதிரடியாக மீட்டனர்.

கோவை, சரவணம்பட்டி பகுதியில் கடந்த 1993-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட மீனாட்சி நகர் மனைப் பிரிவில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட 50 சென்ட் நிலம் அப்போதே பேரூராட்சிக்குத் தானமாக வழங்கப்பட்டது. ஆனால், பொதுமக்களுக்குச் சொந்தமான அந்தப் பூங்கா நிலத்தில் சுமார் 13 சென்ட் நிலத்தைச் சிவஞானம் என்ற தி.மு.க ஆதரவாளர் அப்பட்டமாக ஆக்கிரமித்து, மதில் சுவர் எழுப்பித் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்து இருந்தார்.

அதிகாரிகளிடம் தான் ஒரு செல்வாக்கு மிக்கவர் என்றும், முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலினுக்குத் தன்னை நன்கு தெரியும் என்றும் கூறி அதிகார மிரட்டிப் பணிய வைத்து வந்ததாகப் கூறப்படுகிறது.

​இந்த விவகாரத்தில் கடந்த 2021-ம் ஆண்டு மாநகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்பை அகற்ற நோட்டீஸ் அனுப்பிய போது, அதனை எதிர்த்து சிவஞானம் நீதிமன்றத்தை நாடினார். இருப்பினும், இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச், கடந்த டிசம்பர் 19, 2025 அன்று அவரது மனுவைத் தள்ளுபடி செய்து, ஆக்கிரமிப்பை அகற்ற தீர்ப்பு வழங்கியது.

இதை தொடர்ந்து, மாநகராட்சி ஆணையாளரின் உத்தரவின் பேரில் நகரமைப்பு அலுவலர் ராஜசேகரன், உதவி நகரமைப்பு அலுவலர் சத்தியா மற்றும் போலீசார் பொக்லைன் இயந்திரத்துடன்
ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த சுமார் 3.5 கோடி ரூபாய் சந்தை மதிப்பு கொண்ட அந்த நிலத்தில் கட்டப்பட்டு இருந்த மதில் சுவர்கள் பொக்லைன் மூலம் தரை மட்டமாக்கப்பட்டன.

பல ஆண்டுகளாகப் பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் முடக்கி வைக்கப்பட்டு இருந்த நிலம் மீட்டெடுக்கப்பட்டதோடு, மீண்டும் ஆக்கிரமிப்பு நடக்காமல் இருக்க அதிகாரிகள் உடனடியாகக் கம்பி வேலி அமைத்தனர்.