இந்திய ரயில்வேயில் பெண் ஊழியர்களின் எண்ணிக்கை 6.6 சதவீதத்தில் இருந்து 8.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இந்திய ரயில்வேயில் 12.3 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணிபுரிகின்றனர். பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் இந்திய ரயில்வே முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் இந்திய ரயில்வேயில் பெண் ஊழியர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. மொத்த பெண் பணியாளர்களின் எண்ணிக்கை 1.13 லட்சத்தை தாண்டியுள்ளது. இது மொத்த பணியாளர்களில் 8.2 சதவீதமாகும். இது 2014- ம் ஆண்டில் 6.6 சதவீதத்திலிருந்து அதிகரித்துள்ளது.
இந்திய ரயில்வேயில் தற்போது 2,162 பெண்கள் லோகோ பைலட்டுகளாக பணிபுரிகின்றனர். அதே நேரத்தில் 794 பெண்கள் ரயில் மேலாளர்களாக (காவலர்கள்) உள்ளனர். கூடுதலாக, இந்தியா முழுவதும் 1,699 பெண்கள் ஸ்டேஷன் மாஸ்டர்களாக பணிபுரிகின்றனர்.
இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், ” இந்திய ரயில்வேயில் 12,362 பெண் அலுவலக ஊழியர்களும் 2,360 பெண் மேற்பார்வையாளர்களும் பணியாற்றுகின்றனர். பாரம்பரியமாக ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் துறையான தண்டவாளப் பராமரிப்பில், ரயில்களின் பாதுகாப்பான இயக்கத்தை உறுதி செய்வதற்காக 7,756 பெண்கள் தற்போது பணியாற்றி வருகின்றனர். 4,446 பெண்கள் டிக்கெட் சரிபார்ப்பாளர்களாக பணியாற்றுகின்றனர்.
இந்தியா முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் பாயிண்ட்ஸ்மேன்களாக 4,430 பணியாற்றுகின்றனர். மேலும் இந்திய ரயில்வே பல ரயில் நிலையங்களை அனைத்து பெண் குழுக்களுடன் செயல்படுத்தியுள்ளது. இவற்றில் மாதுங்கா, நியூ அமராவதி, அஜ்னி மற்றும் காந்திநகர் ரயில் நிலையங்கள் அடங்கும்” என்றார்.