• Sun. Nov 23rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தங்க நகை கடன் புதிய விதிமுறைகள் – இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு

ByKalamegam Viswanathan

Jun 8, 2025

புதிய தங்க நகை கடன் விதிமுறைகள் மாற்றம் கோரிக்கையை ஏற்ற மத்திய நிதி அமைச்சர் ரிசர்வ் வங்கி ஆளுநர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி என மதுரை பாராளுமன்ற உறுப்பினர் அறிக்கை வெளியிட்டார்.
தங்க நகைக்கடன் தொடர்பாக, தான் வெளியிட்ட விதிமுறைகளில் நாம் கோரிய பத்து மாற்றங்களை ஏற்று புதிய விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இது இந்திய ரிசர்வ் வங்கியின் வரலாற்றிலேயே இது வரை நிகழாத ஒன்று. இந்த மாபெரும் வெற்றிக்காக அனைவருக்கும் நன்றி சொல்லிக்கொள்கிறேன்.

இனி வங்கியில் நகைக்கடன் ஆவணங்கள் அனைத்தும் தாய் மொழியிலேயே இருக்கும் என்பது இந்த வெற்றியின் மகுடமாகும்.

தங்க நகைக்கடன், எங்களது பத்து கோரிக்கைகளையும் ஏற்றுக்கொண்டது ரிசர்வ் வங்கி. இந்த வரலாற்றுச்சிறப்பு மிக்க வெற்றிக்கு நன்றி. சு. வெங்கடேசன் எம். பி. தங்க நகை கடன் தொடர்பாக, சாமானிய மக்களுக்காக நான் எழுப்பிய கோரிக்கைகளை ரிசர்வ் வங்கி ஏற்றுக்கொண்டு புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

  1. இந்த விதிமுறைகள் உடனடியாக அமுலுக்கு வரும். அதிகபட்சமாக 2026 ஏப்ரல் ஒன்றாம் தேதிக்கு முன்பு இந்த விதிமுறைகள் நடைமுறைக்கு வர வேண்டும் என்று ரிசர்வ் வங்கி வரையறுத்துள்ளது.
  2. ரூபாய் 2.5 லட்சம் வரை கடன் பெறுபவர்களுக்கு கடனாளியின் திருப்பி செலுத்தும் திறன் பற்றிய நிபந்தனை கைவிடப்பட்டது.
  3. 2024 செப்டம்பர் 30ஆம் தேதி ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்படி மறுக்கப்பட்ட கடனை புதுப்பித்தல் (renewal) மற்றும் கூடுதல் கடன் (top up) தற்போது வழங்கப்படும்.
  4. அதற்காக புதிதாக கடன் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. அதாவது கடனை புதுப்பிக்கும் போது அல்லது கூடுதல் கடன் பெறும்போது முந்தைய வழிகாட்டுதல் படி விதிக்கப்பட விருந்த தங்க பரிசீலனை (jewel appraisal) தொகை, கடன் செயல்முறை தொகை (processing fee) எதுவும் புதிதாக விதிக்கப்படாது.
  5. நகைக்கான ரசீது கேட்கப்படாது. பழைய முறைப் படியே கடன் வாங்குபவர்கள் “இந்த நகை என்னுடையது தான்” என்று ஒரு சுய அறிவிப்பு செய்தாலே போதுமானது.
  6. ரூபாய் 2.5 லட்சம் வரை கடனுக்கு நகை மதிப்பில் 85 சதவீதம், 2.5 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை கடன் பெறுபவர்களுக்கு நகை மதிப்பில் 80 சதவீதம், ரூபாய் 5 லட்சத்திற்கு மேல் கடன் பெறுபவர்களுக்கு நகை மதிப்பில் 75% கடன் வழங்கப்படும்.
  7. விவசாய கடன் மற்றும் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் அவசர கடன் வாங்குபவர்கள் எந்த நோக்கத்திற்காக கடன் வாங்குகிறார்களோ அதை உறுதி செய்யும் பொறுப்பு கடன் வழங்கும் நிறுவனங்களைச் சார்ந்தது என்ற சரத்து நீக்கப்பட்டு விட்டது. கடன் வழங்கும் நிறுவனங்கள் கடனாளியின் கணக்கில் தான் கடன் தொகையை செலுத்த வேண்டும். மூன்றாம் நபர் கணக்கிற்கு கடனை வழங்கக் கூடாது.
  8. நகை கடன் முழுவதுமாக செலுத்தப்பட்ட உடனே அன்றைய தினமே நகைகள் கடனாளிகளிடம் திருப்பித் தரப்பட வேண்டும் அல்லது அதிகபட்சமாக ஏழு வேலை நாட்களுக்குள் திருப்பி தரப்பட வேண்டும். தாமதமாகும் ஒவ்வொரு நாளைக்கும் கடன் வழங்கும் நிறுவனங்கள் கடனாளிகளுக்கு ரூபாய் 5000 இழப்பீடாக வழங்க வேண்டும். மேலும் நகையை தாமதமாக திருப்பி கொடுத்தால், கடனாளி கடன் வழங்கும் நிறுவனத்திடம் வேறு இழப்பீடு கோரும் உரிமையும் உள்ளது.
  9. வங்கிகளால் விற்கப்படும் 22 கேரட் அல்லது அதற்கு மேல் தூய்மையான தங்க நாணயங்களுக்கு மட்டுமே கடன் வழங்கப்படும் என்ற நிபந்தனை கைவிடப்பட்டது.
  10. கடன் வாங்குபவர்களின் நலனை பாதிக்கும் – குறிப்பாக கடனுக்கான- நிபந்தனைகள் மற்றும் முக்கிய கடிதங்கள் அனைத்தும் அந்தந்த மாநில மொழிகளிலே அல்லது கடனாளிகள் விரும்பும் மொழியிலே இருக்கும்.
    மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ரிசர்வ் வங்கி ஆளுநர் மற்றும் தமிழக முதல்வர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து வீடியோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.