• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நரம்பியல் துறைக்கு புதிய கட்டிடம்

Byவிஷா

May 17, 2024

சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், ரூ.65 கோடி மதிப்பீட்டில், நரம்பியல் துறைக்கு புதிய கட்டிடம் அமைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது..,
ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய அரசு மருத்துவமனையாகும். பழமையான இந்த மருத்துவமனையில் அனைத்து நோய்களுக்கும் தரமான சிகிச்சைகள் இலவசமாக அளிக்கப்படுகின்றன.
2,500 படுக்கை வசதிகளுடன் கூடிய இந்த அரசு மருத்துவமனையில் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பேர் புறநோயாளிகளாக வந்து சிகிச்சை பெறுகின்றனர். இந்த மருத்துவமனைக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரைப்படி, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் நரம்பியல் துறைக்கான அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் ரூ.65 கோடியில் கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் சுகாதாரத் துறை அமைச்சர் அறிவித்தார். இந்த அறிவிப்பை விரைந்து செயல்படுத்தும் வகையில் ரூ.65 கோடியை அனுமதித்து முதல்வர் உத்தரவிட்டார்.
தமிழகத்தில் பொதுப்பணித் துறையால், கடந்த 3 ஆண்டுகளில் ரூ.4,821.55 கோடி செலவில் 941 மருத்துவத் துறை சார்ந்த புதிய கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், நரம்பியல் துறைக்கான இந்த கட்டிடம் 1.12 லட்சம் சதுர அடியில் (10,428 ச.மீ.) 4 தளங்களுடன் 220 படுக்கை வசதிகளோடு உலகத் தரத்தில் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளது.
இந்தக் கட்டிடத்தில் தரைத்தளத்தில் நரம்பியல் மருத்துவ புறநோயாளிகள் பிரிவு, நரம்பியல் அறுவை சிகிச்சை புறநோயாளிகள் பிரிவு, கதிரியக்கவியல் பிரிவு, இயன் மருத்துவ பிரிவு போன்ற வசதிகள் அமையும். முதல் மற்றும் 2-ம் தளங்களில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான பொது வார்டுகள், 3-ம் தளத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் போன்ற வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நான்காம் தளத்தில் நவீன வசதிகள் கொண்ட 6 அறுவை சிகிச்சை அரங்குகள், அறுவை சிகிச்சைக்கு முந்தைய அறை, மீட்பு அறை போன்ற வசதிகள் இடம்பெறும். பொதுப்பணித் துறை மூலம் கட்டப்படும் இக்கட்டிடத்தின் அனைத்துத் தளங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பிடம், பொதுக் கழிப்பிடம், மருத்துவ திரவ ஆக்ஸிஜன் இணைப்புகள், தீயணைப்பு உபகரணங்கள் போன்ற பிற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.