• Wed. May 8th, 2024

பழங்குடி மக்கள் உரிமை பேசும் ‘நாயாடி’

Byadmin

Jun 15, 2023

தனபால்

ஆத்விக் விஷுவல் மீடியா, வாரியர் பிலிம்ஸ் கார்ப்பரேஷன் ஆஸ்திரேலியா மற்றும் ஆதர்ஷ் மதிகாந்தம் பிக்சர்ஸ் சார்பில் ஆதர்ஷ் மணிகாந்தம் தயாரித்து, இயக்கி மற்றும் முதன்மை வேடத்தில் நடித்துள்ள படம் ‘நாயாடி.’தமிழ்நாட்டை சேர்ந்தவரும் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மெட்ரோ ரயிலில் ஓட்டுநராக பணிபுரிந்தவருமான ஆதர்ஷ் மதிகாந்தம், ‘நாயாடி’ என்று பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தை தயாரித்து இயக்குவதோடு முதன்மை கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்.இந்தப் படத்தில் அஜித்துடன் ‘துணிவு’ திரைப்படத்தில் நடித்த காதம்பரி நாயகியாக நடிக்கிறார். பிரபல யூ டியூபரான ஃபேபி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
மேலும் மாளவிகா மனோஜ், அர்விந்த்சாமி, நிவாஸ் எஸ் சரவணன் மற்றும் ரவிச்சந்திரன் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.பரிதாபங்கள் குழுவினரின் திரைப்படத்திற்கு இசையமைத்து வரும் அருண் ‘நாயாடி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார். ஒளிப்பதிவை மோசஸ் டேனியலும், படத் தொகுப்பை சி.எம்.இளங்கோவனும் செய்துள்ளனர். புரூஸ்லீ ராஜேஷ் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.
கேரளாவில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட பழங்குடி இனத்தின் கதையை திரையில் சொல்லும் விறுவிறுப்பான திகில் கலந்த திரில்லர் படமாக இந்த ‘நாயாடி’ உருவாகியுள்ளது.
இது குறித்து பேசிய ஆதர்ஷ் மதிகாந்தம், “திரைப்படத் துறையில் பங்காற்ற வேண்டும் வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. எனவே, ஆஸ்திரேலியாவில் நான் ஈட்டிய பணத்தைக் கொண்டு இந்த ‘நாயாடி’ திரைப்படத்தை உருவாக்கியுள்ளேன்.
திகில் திரைப்படங்களுக்கு என உள்ள வடிவத்தில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டு இருக்கும். அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் வாழும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பழங்குடி இனத்தவரான நாயாடிகள் குறித்தும் அவர்கள் வரலாறு குறித்தும் இப்படம் பேசும்.
பல்லாண்டுகளாக துயரங்களை அனுபவித்து வரும் நாயாடிகள், கடந்த காலத்தில் மனிதர்களிடமிருந்தும் விலங்குகளிடமிருந்தும் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக பில்லி, சூனியம் மற்றும் வூடு எனப்படும் மாந்திரீகங்களை கற்று அதை எவ்வாறு பயன்படுத்தினர் என்பதையும், அவர்களின் இக்கால தொடர்பு குறித்தும் இத்திரைப்படம் விவரிக்கும்.நாயாடி இனத்தை சேர்ந்த ஒருவர் ஐ.ஏ.எஸ். படித்து முடிப்பதற்குள் எவ்வளவு துன்பங்களை எதிர்கொண்டார் என்பதை பிரபல எழுத்தாளரான ஜெயமோகன் தனது ‘நூறு சிம்மாசனங்கள்’ புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இவர்களது வரலாறு இதுவரை திரையில் சொல்லப்படவில்லை. ‘நாயாடி’ திரைப்படம் இதை பூர்த்தி செய்யும்…” என்றார்.
இத்திரைப்படம் வரும் ஜூன் 16-ம் தேதியன்று தமிழ்நாடு மற்றும் கேரளாவில் வெளியாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *