• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

நாளை நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை

Byவிஷா

May 6, 2025

பாகிஸ்தான் உடனான போர் பதற்றத்திற்கு மத்தியில் நாடு முழுவதும் நாளை 244 மாவட்டங்களில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட உள்ளது.
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில் தான், நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் நாளை போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது போர் சூழலில் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் ஒரு மிகப்பெரிய பயிற்சி நடவடிக்கையாகும். இந்த நேரத்தில் ஏவுகணை அல்லது வான்வழி தாக்குதலின் போது மக்கள் எவ்வளவு விரைந்து செயல்பட முடியும் என்பதை ஆராய்கிறது. அதன்படி, போர் போன்ற சூழல் உருவாக்கப்பட்டு வான்வழி தாக்குதலுக்கான எச்சரிக்கையாக சைரன் ஒலிக்கப்படும். குறிப்பிட்ட பகுதியில் உள்ள விளக்குகள் அனைத்தும் அணைக்கப்படும். மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைவது, அவசர கால சேவைகள் உடனடியாக பதிலளிப்பது, அச்சத்தை குறைத்து, குழப்பத்தை தவிர்த்து, மக்களின் உயிரை காப்பாற்றுவது ஆகியவை, இந்த பாதுகாப்பு ஒத்திகையின் போது மேற்கொள்ளப்படும்.
நாடு முழுவதும் உள்ள குறிப்பிட்ட 244 மாவட்டங்களில் தான் இந்த பாதுகாப்பு ஒத்திகை நடைபெற உள்ளது. மாவட்ட அரசு நிர்வாகிகள், சிவில் பாதுகாப்பு வார்டன்கள், ஊர்க்காவல் படை, என்சிசி எனப்படும் தேசிய கேடட் கார்ப்ஸ், என்எஸ்எஸ் எனப்படும் தேசிய சேவை திட்ட தன்னார்வலர்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்தவர்கள் இந்த ஒத்திகையில் ஈடுபட உள்ளனர். கடந்த 1971ம் ஆண்டிற்குப் பிறகு முதல்முறையாக நாடு தழுவிய இத்தகைய பாதுகாப்பு ஒத்திகை இந்தியாவில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்ட 244 சிவில் பாதுகாப்பு மாவட்டங்களில் இந்த ஒத்திகை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2010ம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, தமிழ்நாட்டில் சென்னை மற்றும் கல்பாக்கம் பகுதிகள், சிவில் பாதுகாப்பு மாவட்டங்களாக உள்ளன. இந்த பகுதியில் உள்ள கல்பாக்கம், மீனம்பாக்கம், ஆவடி மற்றும் மணலி ஆகிய பகுதிகளில் தான் இந்த ஒத்திகை நாளை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒத்திகையின் போது என்னவெல்லாம் நடக்கும்?

ஏர் ரைட் சைரன்ஸ்: பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புள்ள நகரங்களில் ஏர் சைரன்கள் ஒலிக்கப்படும். இது வான்வழி தாக்குதல் தொடர்பான முன்னெச்சரிக்களை வழங்கும். பாதுகாப்பான இடத்தில் தஞ்சமடைவதற்கான நேரத்தை அளிக்கும்.

பொதுமக்களுக்கு பயிற்சி: பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பயிற்சி முகாம்கள் நடத்தப்படும். அங்கு பங்கேற்பாளர்களுக்கு பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்வது, அடிப்படை முதலுதவி சிகிச்சை, பதற்றமான சூழலிலும் நிதானமாக யோசிப்பது குறித்து பயிற்சி வழங்கப்படும்.
மின்சாரம் துண்டிப்பு: திடீரென ஒட்டுமொத்த நகரமும் மின்வெட்டால் இருட்டில் மூழ்க, இரவு நேரத்தில் நடைபெறும் வான்வழி தாக்குதலை அடையாளம் காண்பது குறித்து பயிற்சி அளிக்கப்படும். இந்த செயல்முறையானது கடந்த 1971ம் ஆண்டு நடைபெற்ற வங்கதேச விடுதலைப்போரின் போது பின்பற்றப்பட்டது.
மறைப்பு நடவடிக்கைகள்: ராணுவ தளங்கள், தகவல் தொடர்பு கோபுரங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளிட்டவற்றை, எதிரிகளின் செயற்கைக்கோள் அல்லது வான்வழி கண்காணிப்பின் போது அடையாளம் காண முடியாத வகையில் மறைக்கும், மறைப்பு பயிற்சிகளும் நடைபெறும்.
மீட்பு பணி பயிற்சிகள்: இதில் ஆபத்து மிகுந்த பகுதிகளில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றும் நடவடிக்கைகளை வீரர்கள் மேற்கொள்வார்கள். இது உண்மையான இக்கட்டான நேரத்தில் பொதுமக்களை பாதுகாப்பாதற்கான வழிகளை முன்கூட்டியே அடையாளப்படுத்த உதவும்.
பனிப்போர் காலப் பயிற்சிகளை மீண்டும் தொடங்குவது என்பது ஒரு பரந்த உத்தியாக பார்க்கப்படுகிறது. தேசிய பாதுகாப்பு என்பது போர்க்களத்தை மட்டுமே சார்ந்தது அல்ல. உள்நாட்டில் உள்ள மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதாகும். அதன்படி குடிமக்கள் என்ன செய்ய வேண்டும், எப்போது செய்ய வேண்டும், எப்படி அமைதியாக இருக்க வேண்டும் என்பதை அறிந்திருக்கும்போது, நாட்டின் ஒட்டுமொத்த மீள்தன்மை வலுவடைகிறது. தாக்குதலுக்கு எதிர்வினையாற்றுவது மட்டுமல்ல, ஏதேனும் ஒரு ஆபத்து நடப்பதற்கு முன்பே அதற்கு தயாராக இருப்பதும் அவசியமாகும்.