புதுச்சேரி கூட்டுறவுத்துறை கைத்தறி பிரிவு மற்றும் காஞ்சிபுரம் நெசவாளர் சேவை மையம் இணைந்து நடத்திய 11-வது தேசிய கைத்தறி தினவிழா புதுச்சேரி கூட்டுறவு சங்க வளாகத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முதலமைச்சர் ரங்கசாமி, குத்துவிளக்கு ஏற்றி விழாவினை தொடங்கி வைத்தார்.

விழாவில் தட்டாஞ்சாவடி நெசவாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தின் மூலம் நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்பட்ட புதிய வடிவமைப்புடன் கூடிய துண்டு ரகங்களை முதலமைச்சர் ரங்கசாமி அறிமுகப்படுத்தியதுடன் தொடர்ந்து அதிக அளவு நெசவு செய்த தொழிலாளர்களுக்கு பரிசுகள் மற்றும் கைத்தறி நெசவாளர்கள்
சங்கங்களுக்கு ரூ.30.00 இலட்சம் மதிப்புள்ள தறி உபகரணங்கள் மத்திய
அரசின் 90% மானியத்துடன் வழங்கினார்.
பின்னர் விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி..

புதுச்சேரியில் தற்போது நெசவாளர்கள் கைத்தறி செய்வதே குறைந்து போய்விட்டது, இருந்தாலும் கைத்தறி ஆடைகளை வாங்க பொதுமக்கள் முன் வரவேண்டும், என்று கேட்டுக் கொண்ட அவர், பொதுமக்களுக்கு கைத்தறி ஆடைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கண்காட்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது கைத்தறி தொழில்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. பிரதம நெசவாளர்கள் சங்கத்தில் நெசவு செய்யும் நெசவாளர்களுக்கு 20% அகவிலைப்படி உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன்,புதுச்சேரி அரசின் கூட்டுறவுச் செயலாளர்
ஜெயந்தா குமார்,கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் யஸ்வந்தையா, காஞ்சிபுரம், நெசவாளர்கள் சேவை மையத்தின் துணை இயக்குநர் வாசு, உள்ளிட்ட கூட்டுறவு சங்கங்களை சேர்ந்த நெசவாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.