இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தோழர் இரா நல்லகண்ணு நேற்று (ஆகஸ்டு 24) இரவு சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் – சிறப்பு தீவிரச் சிசிச்சை பிரிவில் – அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த இரு நாட்களாக நந்தனம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்றிரவு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
காபி அருந்தும் போது பொறையேறிதால், சற்று மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. அரசு மருத்துவ மனையில் சிறப்பு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்ததில் தோழர் இரா. நல்லகண்ணு உடல் நிலை சீராகி இயல்பு நிலைக்கு வேகமாக திரும்பி , முன்னேற்றம் கண்டு வருகின்றது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
டாக்டர்கள் ஜி ஆர் ரவீந்தரநாத், ஏ ஆர் சாந்தி, தோழர் ஆர் என் கே மகள் டாக்டர் ஆண்டாள் ஆகியோர் உடனிருந்து கவனித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று ஆகஸ்டு 25 காலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் மருத்துவமனை சென்று தோழர் நல்லகண்ணு உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் விசாரித்தறிந்துள்ளார்.
இன்னும் இரண்டொரு நாட்களில் நல்லகண்ணு உடல் நலம் பரிபூரண குணமடைந்து வீடு திரும்புவார் என கூறும் மருத்துவர்கள், தற்போது அவரை நேரில் காண்பதற்கு சிறப்பு தீவிர சிகிச்சை பிரிவுக்கு நேரில் வருவதை தவிர்த்து உதவுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதை சுட்டிக் காட்டியுள்ள முத்தரசன், “மருத்துவர்களின் இந்த அறிவுறுத்தலை அனைவரின் கவனத்துக்கும் தெரிவித்துக் கொள்கிறோம் எனவே, தோழர்கள், நண்பர்கள் அனைவரும் மருத்துவ மனைக்கு நேரில் செல்வதை தவிர்த்து உதவுமாறு மாநிலக் குழுவின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.