• Fri. Feb 13th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

ஸ்டாண்டில் நின்ற வாகனங்களை குறி வைக்கும் மர்ம நபர்கள்..,

BySeenu

Feb 13, 2026

கோவை, மாநகரில் சமீபகாலமாக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத் திருட்டுகள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது ஆட்டோக்களில் நூதன கொள்ளை அரங்கேறி உள்ளது.

ஆட்டோவிலேயே வந்து, ஆள் இல்லாத ஆட்டோக்களை நோட்டமிட்டு அதில் உள்ள உதிரிப் பாகங்களைத் திருடிச் செல்லும் நான்கு பேர் கொண்ட மர்ம கும்பலின் செயல் ஆட்டோ தொழிலாளர்கள் மத்தியில் பெரும் பீதியை கிளப்பி உள்ளது.

கோவை, சிவானந்தா காலனி அருகே மேட்டுப்பாளையம் சாலை, புதுப்பாலம் பகுதியில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் கண்ணன் மற்றும் கணேசன் ஆகியோர் தங்களது ஆட்டோக்களை வழக்கம் போல நிறுத்திச் சென்று உள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, கண்ணன் வெளியூர் சென்று இருந்த நேரத்தில், ஒரு ஆட்டோவில் அங்கு வந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல், மிகவும் கேஷுவலாக அந்த ஸ்டாண்டில் ஆட்டோவை நிறுத்தி உள்ளனர். பின்னர் சுற்றும் முற்றும் நோட்டமிட்டு, கண்ணன் மற்றும் கணேசனின் ஆட்டோக்களில் இருந்து கதவு, பேட்டரி மற்றும் ஸ்டெப்னி டயர் ஆகியவற்றை லாவகமாகக் கழற்றித் தங்களது ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு அங்கு இருந்து சென்று உள்ளனர்.

மறுநாள் காலையில் வந்து பார்த்த ஓட்டுநர்கள், தங்களது வாழ்வாதாரமாக விளங்கும் ஆட்டோக்களின் பாகங்கள் மாயமாகி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அங்கு உள்ள கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளை ஆய்வு செய்த போது, ஆட்டோவில் வந்தே இந்தத் திருட்டு அரங்கேறி இருப்பது தெரியவந்தது. திருட வந்த கும்பல், மற்றவர்கள் சந்தேகப்படக் கூடாது என்பதற்காகத் தங்களது ஆட்டோவையும் அங்கேயே நிறுத்தி விட்டு கைவரிசை காட்டியது ஆட்டோ ஓட்டுநர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

​இது குறித்துப் பாதிக்கப்பட்ட கண்ணன் ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.

சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து உள்ள காவல் துறையினர், இரவு நேரங்களில் ஆட்டோக்களில் வந்து கொள்ளை அடிக்கும் அந்த மர்ம கும்பலை வலைவீசித் தேடி வருகின்றனர்.

ஆட்டோ ஸ்டாண்டிலேயே ஆட்டோ பாதுகாப்பற்ற சூழல் நிலவுவது, கோவை வாகன ஓட்டிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.